பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

போலவே அவனும் சொன்னதைச் செய்யாமல் அவற்றை உதறி, பெயரில் மட்டுமல்ல, வாழ்விலும் நான் சாட்சாத் விக்கிரமாதித்தனாகவே வாழ்வேன்!’ என உறுதி பூண்டு, மெளண்ட்ரோடிலே முப்பத்திரண்டு அடுக்கு மாளிகை ஒன்று இல்லாத குறையைப் பலருடைய கூட்டு முயற்சியால் நிவர்த்தி செய்து, அந்த மாளிகையில் பிரசித்தி பெற்ற ஸ்பென்ஸர் கம்பெனிக்கு ‘வவ் வள் வவ்வே’ காட்டுவது போல் ‘விக்கிரமாதித்தன் வென்சர்ஸ்’ என்று ஒரு கம்பெனி ஆரம்பித்து, அந்தக் கம்பெனிக்குத் தானே மானேஜிங் டைரக்டராகி, முப்பத்திரண்டாவது மாடியில் தனக்கென்று ஓர் ஏர் கண்டிஷன் அறை'யை அமைத்துக் கொண்டு, அந்த அறையில் தன் அப்பா சந்திரவர்ணராகப்பட்டவர் வாங்கிப் போட்டுவிட்டுப் போன அதிர்ஷ்ட நாற்காலியை மறக்காமல் கொண்டு வந்து போட்டுக்கொண்டு அமர்ந்து, ‘சிட்டி, சிட்டி’ என்று அழைக்கப்பட்ட தம்பி சிட்டிபாபுவையே தன் அந்தரங்கக் காரியதரிசியாக அமர்த்திக் கொண்டு, சாட்சாத் விக்கிரமாதித்தனைப் போலவே இந்த விக்கிரமாதித்தனும் அரசோச்சி வருங்காலையில், ‘போஜன், போஜன்’ என்று சொல்லப்பட்ட ஒருவர் நீதிதேவன் என்னும் தன் நண்பனுடன் ஒரு நாள் ஏதோ ஒரு காரியமாக மிஸ்டர் விக்கிரமாதித்தனைப் பார்க்கவர, முதல் மாடியின் வரவேற்பறைக்குப் பொறுப்பேற்றிருந்த வணிதாமணி ரஞ்சிதம் அவர்களை வரவேற்று, “அகோ! வாரும் பிள்ளாய், போஜனே! மிஸ்டர் விக்கிரமாதித்தரை அவ்வளவு சுலபமாகப் பார்க்க உங்களை நான் விட்டுவிடுவேனா? விட்டால் நான் ‘ரிஸப்ஷனிஸ்ட்’ ஆவேனோ? உட்காரும், அவருடைய அருமை பெருமைகளைக் கூறும் கதையைக் கேளும்!” என்று கதை சொல்ல ஆரம்பிக்க, போஜன் வேறு வழியின்றிக் கொட்டாவி விட்டுக் கொண்டே உட்கார்ந்து, அவள் சொன்ன கதையைக் கேட்பானாயினன் என்றவாறு... என்றவாறு... என்றவாறு...