பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

229


அங்ஙனமே பையன் போய்ச் சொல்ல, உடையில் ராஜாஜியையும், நாசித் துவாரங்கள் இரண்டும் சற்றே அகன்றிருந்ததால் முகத்தில் கோயில் விதானங்களின் உச்சியில் உள்ள ஆளியையும் ஒத்திருந்த நெட்டையர் ஒருவர் உள்ளே நுழைந்து, 'குட்மார்னிங், ஜெய் ஹிந்த், வணக்கம்!’ என்று சொல்லிவிட்டு, 'முதன் முதலாக உங்களைச் சந்திப்பதால் உங்களுக்கு எந்த வணக்கம் பிடிக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆகவே, மூன்று விதமான வணக்கங்களையும் சொல்லி வைத்தேன்; உங்களுக்கு எது பிடிக்குமோ அதை ஏற்றுக் கொள்ளுங்கள்!' என்று சொல்ல, மனிதனை மனிதன் வணங்குவதே எனக்குப் பிடிக்காது. தப்பித் தவறி யாராவது வணங்கினால் அவர்களிடம் நான் மிகவும் எச்சரிக்கையாயிருப்பது வழக்கம்!' என்று விக்கிரமாதித்தர் சொல்ல, வந்தவர் காது கொஞ்சம் கேட்காத தோஷத்தால் கேட்டவர் போல் சிரித்து, 'இந்தக் காலத்திலும் வெள்ளையரைப் பிடிக்கும் சிலர் இங்கே இருக்கிறார்கள் அல்லவா? அவர்களைக் கண்டால் நான் ‘குட் மார்னிங்' என்று சொல்வேன். காங்கிரஸ்காரனைக் கண்டால் ஜெய் ஹிந்த், தி.மு.க. வைக் கண்டால் வணக்கம். நமக்கு ஏன் ஒருவருடைய பொல்லாப்பு? வியாபாரம் நமக்கு முக்கியமா? கட்சி நமக்கு முக்கியமா? என்று கேட்க, 'நமக்கு, நமக்கு என்று சொல்லி என்னையும் உங்கள் சர்வ கட்சியில் சேர்த்துக்கொண்டு விட்டீரே? எனக்கு என்று சொல்லும்!' என்று விக்கிரமாதித்தர் திருத்த, வந்தவர் அதையும் ஒரு சிரிப்புச் சிரித்துச் சமாளிப்பாராயினர்.

‘சரி, விஷயத்துக்கு வாருங்கள்!’ என்று விக்கிரமாதித்தர் அவரைத் தூண்ட, ‘என்னை உங்களுக்குத் தெரிந்திருக்கு மென்று நினைக்கிறேன். 'சர்வகட்சி சாரநாதன்' என்று மட்டும் அல்ல; 'இன்பசாகரம் சாரநாதன்’ என்றும் என்னை அழைப்பார்கள்!' என்று வந்தவர் ஆரம்பிக்க, ‘இன்பசாகரம் என்றால் தாதுபுஷ்டி லேகியம், மாத்திரை ஏதாவது தயார் செய்து விற்க வந்திருக்கிறீரா, என்ன? அப்படி ஏதாவது