பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன்

289

தெரிந்தது. இப்போதெல்லாம் கணவன்மாரை வேலைக்கு அனுப்பியதும், அவர்கள் வீட்டிற்கு வருவதற்குள் அவர்களுக்குத் தெரியாமல் 'மாட்டினி ஷோ'வுக்குச் சென்று வருவதுதானே மனைவியரின் ‘நித்திய கடமைக'ளில் ஒன்றாயிருக்கிறது? அந்தக் கடமையை நிறைவேற்ற உங்கள் மனைவியும் இங்கே வந்திருக்கலாம் என்று நான் நினைத்தேன்; நினைத்தது சரியாகிவிட்டது!’ என்று விக்கிரமாதித்தர் சொல்ல, 'அது தெரியாமல் போச்சே எனக்கு!' என்று வந்தவர் வியக்க, ‘எப்படித் தெரியும்? உங்களுக்கும் நாம் வேலைக்குப் போனதும் நம் மனைவி மாட்டினி ஷோவுக்குப் போவாள் என்று தெரியாது; உங்கள் மனைவிக்கும் உங்களுடைய கம்பெனியில் இப்படித் திடீர் வேலைநிறுத்தம் நடக்கும் என்று தெரியாது!’ என்று விக்கிரமாதித்தர் சிரிக்க, 'நன்றி, நான் வருகிறேன்!' என்று அதுவரை நடுத்தெரு நாராயணனாக இருந்தவர், வெறும் நாராயணனாகி வீடு திரும்புவாராயினர்.”

ருபத்தோராவது மாடி ரிஸப்ஷனிஸ்ட்டான இந்திரா இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, “நாளைக்கு வாருங்கள்; இருபத்திரண்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் பங்கஜா சொல்லும் கதையைக் கேளுங்கள்!’ என்று சொல்ல, "கேட்கிறோம், கேட்கிறோம், கேட்காமல் எங்கே போகப் போகிறோம்?" என்று போஜனும் நீதிதேவனும் வழக்கம் போல் கொட்டாவி விட்டுக்கொண்டே கீழே இறங்குவாராயினர் என்றவாறு... என்றவாறு... என்றவாறு.......



மி.வி.க -19