பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

172

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தர் சட்டென்று கையோடு கொண்டு வந்திருந்த திரையைப் பைத்தியத்துக்கு முன்னால் விரித்துப் பிடித்து, ‘எட்டிப் போங்கள், எட்டிப் போங்கள்!' என்று அவர்களை நோக்கிச் சொல்ல, 'ஏன்?’ என்று அவர்கள் கேட்க, 'பெண் வாடை வேண்டாதா பெரியண்ணன் அம்மா, இவர்! எட்டிப் போங்கள், தயவு செய்து எட்டிப் போங்கள்!’ என்று அவர் பின்னும் சொல்ல, ‘இது என்ன அதிசயம்? ஏட்டிக்குப் போட்டியாக இருக்கிறதே! பெண் வாடை ஏன் பிடிக்காதாம் இவருக்கு?' என்று ரத்தினம் மூக்கின்மேல் விரலை வைக்க மறந்து வாயின்மேல் விரலை வைத்துக் கேட்க, ‘சொல்லப்பா கதையை, திரைக்குப் பின்னாலிருந்தே சொல்?' என்று விக்கிரமாதித்தர் சொல்ல, பைத்தியம் அவர் சொன்ன கதையை அப்படியே திருப்பிச் சொல்வானாயினன்.

அதைக் கேட்ட ரத்தினம், ‘ஆ! இப்பொழுதல்லவா எனக்கு உண்மை புரிகிறது! அவர்மேல் சந்தேகம் கொண்டு நான் அந்த அகதிக்கு ஆண் வேடம் போடலாம்; அவர் என் மேல் சந்தேகம் கொண்டு பெண் வேடம் போடக் கூடாதா? தாராளமாகப் போடலாம். இதெல்லாம் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளாததால் வந்த வினை; போகட்டும். போன ஜன்மத்தில்தான் நாங்கள் ஒருவரை யொருவர் புரிந்து கொள்ளாமல் செத்தோம்; இந்த ஜன்மத்திலாவது ஒருவரை யொருவர் புரிந்துகொண்டு வாழ்கிறோம்!' என்று சொல்ல, விக்கிரமாதித்தர் திரையை விலக்கி, 'என்னப்பா, இப்போது பெண் வாடை படலாமா?’ என்று 'முன்னாள் பெரியண்ண'னைக் கேட்க, ‘படலாம், படலாம்!' என்று அவன் பரவசத்துடன் சொல்ல, அதற்குள் அவனை இனம் கண்டு கொண்ட ரத்தினத்தின் தோழிகளில் ஒருத்தி, 'இவர் வேறு யாரும் இல்லையடி, உன்னைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்த உன் மாமன் மகன்தான்!' என்று சொல்ல, ‘யாராயிருந்தால் என்ன? போன ஜன்மத்தில் கிடைத்த புண்ணியவானே இந்த ஜன்மத்திலும் கிடைத்தாரே,