பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

248

14

பதினான்காவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் பூரணி சொன்ன

சந்தர்ப்பம் சதி செய்த கதை

"கேளாய், போஜனே! ஒரு நாள் மாலை வழக்கத்துக்கு விரோதமாகப் பாதாளம் கொஞ்ச நேரம் கழித்து வேலைக்கு வர, ‘என்ன விசேஷம், இன்று ஏன் இவ்வளவு நேரம்?' என்று விக்கிரமாதித்தர் விசாரிக்க, ‘எங்கள் மக்கள் மன்றத்தில் ஒரு தகராறு; அதைத் தீர்த்து வைப்பதற்குள் எனக்குப் 'போதும், போதும்' என்று ஆகிவிட்டது!’ என்ப தாகத்தானே அவன் சொல்ல, ‘உங்கள் மக்கள் மன்றமா? அப்படி ஏதாவது ஒன்றை நீயும் எங்கேயாவது ஆரம்பித்து நடத்தி வருகிறாயா, என்ன?’ என்பதாகத்தானே இவர் வியப்பும் திகைப்புமாய்க் கேட்க, 'ஆமாம், மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்ற ஆர்வம் என் உள்ளத்திலும் திடீரென்று ஒரு நாள் ‘பொங்கு, பொங்கு' என்று பொங்கி, ‘வழி, வழி' என்று வழிந்தது. அது வீணாய்ப் போய்விடக் கூடாதே என்று அப்படி ஒரு மன்றத்தை நானும் எங்கள் வட்டாரத்தில் ஆரம்பித்து நடத்தி வருகிறேன்!’ என்று பாதாளம் பகர, 'உங்கள் வட்டாரத்துக்குச் சொல்வதை என்னிடமும் சொல்லாதே! உண்மையைச் சொல்?’ என்று விக்கிரமாதித்தர் அவன் முதுகில் ஒரு தட்டுத் தட்டிக் கேட்க, ‘உங்களுக்குத் தெரியாததா? இந்தக் காலத்தில்தான் எத்தனை வழிகளில், எத்தனை கைகளில் சம்பாதித்தாலும் செலவுக்குப் போத மாட்டேன் என்கிறதே? இப்படி ஒரு மன்றம், கின்றம்