பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

197

செங்காட்டாங்குடி போகுமுன் திருமருகலில் கோயில் கொண்டிருக்கும் மாணிக்க வண்ணரையும், வண்டுவார் குழலியையுமே தரிசித்து விடலாம். இந்த மருகலுக்கு வந்து இறைவனை வணங்கிய அப்பர்,

பெருகலாம் தவம்; பேதமை தீரலாம்;
திருகலாகிய சிந்தை திருத்தலாம்;
மருகலாம் பரம் ஆயதோர் ஆனந்தம்;
மருகலான் அடி வாழ்த்தி வணங்கவே

என்று பாடியிருக்கிறாரே. தவத்தால் பெறும் பேற்றையும், பேதைமை தீர்வதையும்விட திருகிக்கொண்டே இருக்கும் சிந்தனையையே திருத்திக் கொள்ளலாம் என்றல்லவா கூறுகிறார் அப்பர். திருகு சிந்தையைத் திருத்தத் தெரியாமல் தானே பெரிய அவதிக்கு உள்ளாகிறோம் நாம். ஆதலால் மருகல் சென்று திருகும் சிந்தையைத் திருத்திக்கொண்ட பின்னரே மேல் நடக்கலாம். மருகல் கோயிலில் இறைவன் இருப்பது ஒரு கட்டு மலைமேலே. சோழன் செங்கணான் கட்டிய மாடக் கோயிலில் ஒன்று இது. இங்கிருக்கும் மாணிக்கவண்ணர் சுயம்பு மூர்த்தி. இம்மூர்த்தி நல்ல வரப்பிரசாதி என்பதை விஷம் தீண்டி இறந்த செட்டிப் பிள்ளையை ஞானசம்பந்தர் உயிர்ப்பித்தருளிய கதையிலிருந்து தெரிந்து கொள்கிறோம். கதை இதுதான். செட்டியார் மரபைச் சேர்ந்த இளைஞன் ஒருவன். அவன் மாமன் மகளை வேறு ஒருவனுக்குக் கட்டிக் கொடுக்க அவளது பெற்றோர் முனைகின்றனர். ஆனால் காளையும் கன்னியுமோ நல்ல இளங் காதலர்கள். ஆதலால் அவன் தன் காதலியைக் கூட்டிக் கொண்டு ஊரைவிட்டே புறப்படுகிறான். மருகல் வந்து இரவில் ஒரு திருமடத்தில் தங்குகிறார்கள் இருவரும். இளைஞனை அன்றிரவு பாம்பு தீண்டிவிடுகிறது. அவன் உயிர் துறந்து விடுகிறான். செட்டிப் பெண்ணோ கதறித் துடிக்கிறாள். அப்போது ஞானசம்பந்தர் அந்தத் தலத்துக்கு வந்து சேருகிறார். பெண்ணின் துயரை அறிகிறார், பாடுகிறார்;