பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன்

207

‘அவனைக் காலேஜில் சேர்த்துவிட்டு நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்? வழக்கம்போல் ரோடிலே கிடக்கும் கண்ணாடிச் சில்லுகளையெல்லாம் பொறுக்கிக் கொண்டிருக்கப் போகிறீர்களா? அப்படிப் பொறுக்குவதாயிருந்தால் அவனைக் காலேஜில் சேர்க்க வேண்டாம்; அவன் வயதுக்குத் தகுந்த ஏதாவது ஒரு வேலையில் அவனைச் சேருங்கள். இனிமேல் உங்கள் சம்பளத்தை மட்டும் வைத்துக்கொண்டு என்னால் இந்தக் குடித்தனத்தை நடத்த முடியாது!’ என்று பொரிந்தாள்.

பார்த்தார் வாத்தியார்; அதுவரை 'பதி சொல் தாண்டாத பாவை'யாயிருந்த தம் பத்தினி ஏன் இப்போது ‘பதி சொல் தாண்டும் பத்திரகாளியானாள்?’ என்று யோசித்தார். அந்த யோசனையின் முடிவில், ‘வரவரப் பொறுப்புகள் அதிகமாவதுதான் அதற்குக் காரணம்’ என்பதை அவர் உணர்ந்தார். உணர்ந்து என்ன செய்ய? வாத்தியார் இந்த நாளில் தம்முடைய வருவாயைப் பெருக்கிக்கொள்வதற்குள்ள ஒரே வழி 'டியூஷன்' சொல்லித் தருவதுதானே? அதுவும்தான் அவருக்குத் தொண்டாகப் போய்விட்டதே!

யோசித்தார் வாத்தியார்; அகிலாண்டம் சொல்வது போல் தம் பையனை ஏதாவது ஒரு வேலையில் சேர்த்து விடுவதுதான் தமக்கும் நல்லது, தம்முடைய தொண்டுக்கும் நல்லது என்று தீர்மானித்து, அவனுக்காக ஓய்ந்த நேரத்தில் வேலையும் தேடத் தொடங்கினார்.

அதற்குள் அவருடைய பெண்களில் ஒருத்தி, எதிர் வீட்டுப் பையனின் ‘திவ்விய தரிசன'த்துக்காக 'ஜன்னல் தவம்' செய்ய ஆரம்பிக்க, அதை அவளுக்குத் தெரியாமல் அவர் மனைவி ஒரு நாள் அவருக்குச் சுட்டிக் காட்ட, ‘வளரட்டும் காதல், வாழட்டும் காதல்' என்று அவர் கொஞ்சம் முற்போக்குடன் சொல்ல, 'வாழ்ந்தது போங்கள்! அப்படி ஏதாவது இருந்தால் அவனைக்கொண்டே இவள் கழுத்தில் மூன்று முடிச்சைப் போட வைக்கலாம் என்று