பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

282


வாசலுக்குப் போய் அவர்களை வரவேற்று அழைத்து வருகிறோம்' என்றுக் கிளம்ப, 'அதுதான் கூடாது; முதலில் அந்தக் காரியத்தைக் கூர்க்கா செய்யட்டும்; பிறகு நீங்கள் செய்யலாம் என்று அவர் அவர்களையும் தம்முடன் உட்கார வைத்துக்கொண்டு வாசலை 'நோக்கு, நோக்கு' என்று நோக்குவாராயினர்.

பணக்காரப் பையன் காரில் வந்தான்; அவனுக்கும் அவன் காருக்கும் சேர்ந்தாற்போல் ஒரு 'சல்யூட்' அடித்து அவனை உள்ளே விட்டான் கூர்க்கா. அடுத்தாற்போல் படித்த பையன் கால் நடையாக வந்தான்; அவனை வாசலிலேயே நிறுத்தி, 'நீ யார், எங்கே வந்தாய்?' என்று அதே கூர்க்கா அவனை ஆதியோடந்தமாக விசாரிக்க ஆரம்பித்தான்.

அங்ஙனம் அவன் விசாரித்துக் கொண்டிருந்தகாலை வியப்பினால் விரிந்த கண்கள் விரிந்தபடி அவனையே பார்த்துக் கொண்டிருந்த தம்பதியர் பக்கம் விக்கிரமாதித்தர் திரும்பி, 'இனிமேலும் நான் சொல்வதற்கு ஏதாவது இருக்கிறதா?’ என்று கேட்க, ‘இல்லை, பணக்காரப் பையனுக்கே நாங்கள் பெண்ணைக் கொடுத்துவிடுகிறோம்!' என்று அவர்கள் சொல்ல, 'மங்களம் உண்டாகட்டும்!' என்று அவர் அவர்களை ஆசீர்வதித்துவிட்டு, அவர்களிடமிருந்து விடை பெற்றுக் கொள்வாராயினர்."

த்தொன்பதாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட்டான சற்குணா இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, “நாளைக்கு வாருங்கள்; இருபதாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் சுந்தரா சொல்லும் கதையைக் கேளுங்கள்!’ என்று சொல்ல, "கேட்கிறோம், கேட்கிறோம், கேட்காமல் எங்கே போகப் போகிறோம்?" என்று போஜனும் நீதிதேவனும் வழக்கம் போல் கொட்டாவி விட்டுக்கொண்டே கீழே இறங்குவாராயினர் என்றவாறு... என்றவாறு... என்றவாறு...