பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன்

231

கேட்டார்!' என்று வந்தவர் தன் வயிற்றில் தானே ஓர் அடி அடித்துக்கொண்டு, 'இந்த உலகத்தில் எனக்குப் பிடிக்காத விஷயம் ஏதாவது ஒன்று உண்டு என்றால், அது இந்த எழுத்தாளர்கள் தாங்கள் எழுதும் புத்தகங்களுக்கு ‘ராயல்டி' கேட்கும் விஷயம்தான். எதற்காக இவர்களுக்கு ‘ராயல்டி' கொடுக்கவேண்டும்? தாங்கள் எழுதும் புத்தகங்களுக்கு இவர்கள் செய்யும் முதலீடெல்லாம் மூளை ஒன்றுதானே? அதற்கா ராயல்டி? நாங்களோ பணத்தை முதலீடு செய்கிறோம். அதை வட்டிக்கு விட்டால் வட்டி வரும்; மூளையை விட்டால் என்ன வரும்? வட்டி வருமா? பாண்டு, பத்திரம் எழுதுவோர் 'எழுத்துக் கூலி' என்று ஏதோ ஒன்று கேட்பது போல இவர்களும் வேண்டுமானால் கேட்கலாம். நாங்களும் 'போகிறது, போ!’ என்று ஐம்பது ரூபாயை ஐம்பது தவணைகளிலாவது கொடுத்துத் தொலைக்கலாம். இது தெரியாமல் அவர் அந்த ‘ராயல்டி கேட்கும் மாபாவ'த்தைச் செய்யத் துணிந்தார். அதற்கும் நான் பின் வாங்கவில்லை; சொன்னது சொன்னபடி 'பில்' போட்டுக் கொடுக்க இருக்கவே இருக்கிறது 'அனுமான் அச்சகம்’ என்று துணிந்து, ஆயிரம் பிரதிகளுக்குரிய ‘ராயல்டி'யை அவரிடம் கொடுத்து எழுதி வாங்கிக்கொண்டு, என்னுடைய நன்மைக்காக மட்டுமல்ல, அவருடைய நன்மைக்காகவும் இரண்டாயிரம் பிரதிகள் அவருக்குத் தெரியாமல் அச்சிட்டு விற்றேன். 'இது அநியாயமில்லையா?' என்று நீங்கள் கேட்கலாம். இந்த அநியாயத்தை நான் செய்திராவிட்டால் அவரும் இவ்வளவு சீக்கிரம் பெரிய மனிதராகியிருக்க முடியாது; நானும் இவ்வளவு சீக்கிரம் பெரிய பிரசுரகர்த்தராகியிருக்க முடியாது...’

இங்ஙனம் தன் அருமைத் தலைவரும், தனக்குத் 'தூண்டில் முள்’ போல் நாளது வரை விளங்கிவருபவருமான திருப்பதி திருஞானம் பெரிய மனிதரான கதையையும், தான் பெரிய பிரசுரகர்த்தரான கதையையும் சர்வகட்சி சாரநாதனாகப்பட்டவர் சொல்லிக்கொண்டு வந்தகாலை,