பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144

வேங்கடம் முதல் குமரி வரை

செல்ல விரும்பினால் மாயூரம் ஜங்ஷனில் இறங்கி, காரில் ஏறிக் கண்ணை மூடிக்கொண்டு நேர்கிழக்கே பதின்மூன்று மைல் சென்றாலும் இத்தலம் வந்து சேரலாம். (திருக்கடவூர் என்பதையே திருக்கடையூர் ஆக்கியிருக்கிறார்கள் மக்களும் ரயில்வே நிர்வாகத்தாரும். இதற்குத் தக்க ஆதாரம் இல்லாமலும் இல்லை. அந்தப் பழைய சங்கீதக் கோவலன் நாடகத்திலே 'திருக்கடையூர்' என்பதும் இது தானோ? தேரோடு வீதி என்பதும் இது தானோ?' என்று பாடிக் கொண்டே கோவலன் மாதவியைத் தேடிக்கொண்டு இங்கு வந்திருக்கிறான், அது போதாதா?) அட்டவீரட்டத் தலங்களில் இந்தத் திருக்கடவூர் ஒன்று.

இந்தத் தலத்துக்குத் திருக்கடவூர் என்று ஏன் பெயர் வந்தது? அன்று பாற்கடலையே தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து கடைந்து அமுதம் எடுத்திருக்கின்றனர். இந்த அமுதத்தை அசுரர்களுக்குக் கொடுக்காமல் தாங்களே உண்டு அமரத்வம் பெற தேவர்கள் எண்ணி அதை அசுரர்கள் அறியாமல் எடுத்துச் சென்றிருக்கிறார்கள். அப்படிக் குடத்திலே நிரப்பிக்கொண்டு வந்த அமுதத்தை ஓரிடத்தில் இறக்கி வைத்துவிட்டு நீராடச் சென்றிருக்கின்றனர். நீராடிவிட்டு வந்து குடத்தை எடுக்க முயன்றால் அது பூமியிலே வேர் ஊன்றி நின்று எடுக்கவே இயலாதிருந்திருக்கிறது. அப்படி அமுதக்குடம் லிங்கத் திருவுருவில் நிலைத்து நின்ற இடமே கடவூர். அப்படி நிலைத்து நின்றவரே அமுதகடேசுவரர். இந்த அமுதகடேசுவரர் சந்நிதி மேற்கு நோக்கியே இருக்கிறது. கோயில் மிகப்பெரிய கோயில். கோயில் வாயிலில் இருக்கும் ராஜகோபுரம் மிகவும் கம்பீரமாக உயர்ந்திருக்கிறது. சமீபத்தில் புதுப்பிக்கப் பெற்றிருக்கிறது. வழக்கமாக வாரிக்கொட்டும் வர்ண விஸ்தாரங்கள் இல்லாமல் கண்ணுக்கு இனிமையாய் இயற்கையான