பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான்

161

பெயர்களே இவை) கைப்பற்றினான் என்று இவன் மெய்க்கீர்த்தி சிறப்பாகச் சொல்கிறது, கடாரம் இன்றைய மலேயாவின் மேல்கரையிலுள்ள 'கெடா' என்ற பெயருடைய நகரமே என்றும் தெரிகிறோம். இப்படிக்கங்கா நதியும், கடாரமும் கைக் கொண்டு சிங்காதனத்திருந்த செம்பியர்கோனை, கங்கை கொண்டான் என்று எப்படி அழைத்தார்களோ, அப்படியே கடாரம் கொண்டான் என்றும் அழைத்திருக்க வேண்டுமே. கங்கை கொண்ட சோழீச்சரம் போல், கடாரம் கொண்ட சோழீச்சரம் ஒன்றும் உருவாக்கியிருக்க வேண்டுமே. அப்படி உரு வாக்காமலா இருந்திருப்பான் என்று எண்ணிக் கொண்டே சரித்திர ஏடுகளைப் புரட்டினேன். சோழ நாட்டில் உள்ள தலங்களின் பெயர்களை அலசி ஆராய்ந்தேன். கண்டு பிடித்தேன் ஓர் உண்மையை, தஞ்சை ஜில்லாவிலே மாயூரத்துக்கு வடகிழக்கே எட்டு மைல் தூரத்தில் ஒரு சிறிய ஊர் ‘புன்செய்' என்ற பெயரில் இருக்கிறது. இந்த ஊருக்கே தேவாரத்தில் நனிபள்ளி என்ற பெயரும் வழங்கியிருக்கிறது. ஆனால் அந்த வட்டாரத்தில் விசாரித்தால் புன்செய் என்ற பெயரும் தெரியாது, நனிபள்ளி என்ற பெயரும் தெரியாது. மக்கள் இந்த ஊரை அழைப்பது எல்லாம் 'கிடாரம் கொண்டான்' என்ற பெயரில்தான். கடாரம் கொண்டான் என்ற மிக்க பெருமையோடு வழங்க வேண்டிய பெயர் எப்படிச் சிதைந்து கிடாரம் கொண்டான் ஆகிவிட்டது என்று தெரிகிறபோது கொஞ்சம் வருத்தம் ஏற்படவே செய்கிறது. இன்று நாம் இந்தக் கிடாரம் கொண்டான் என்னும் நனிபள்ளிக்கே செல்கிறோம்.

இந்த நனிபள்ளிக்கு மாயூரத்திலிருந்து காரிலோ, வண்டியிலோ போகலாம். இல்லை, மாயூரம்-தரங்கம்பாடி ரயில் வழியில், செம்பொன்னார் கோயில் ஸ்டேஷனில் இறங்கி வண்டி வைத்துக் கொண்டும் செல்லலாம். நல்ல மண் ரோடுதான். ஆதலால் விரைவில் போய் விரைவில்

வே.மு.கு.வ -11