பக்கம்:வேங்கடம் முதல் குமரி வரை-தமிழகத்துக் கோயில்கள்-2.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146

வேங்கடம் முதல் குமரி வரை

எப்படி லிங்கத் திருவுருவிலிருந்து எழுந்தார் என்பதைக் காண, கோயில் முதல் பிராகாரத்தில் இருக்கும் பிச்சக் கட்டளை ஆபீசுக்கே போகவேணும். அங்கே சின்னஞ்சிறு உருவில் இருப்பவரைப் பார்த்தே திருப்தி அடைய வேணும். மகா மண்டபத்திலிருக்கும் காலசம்ஹாரர் சந்நிதிக்கு எதிரே யமனார் அவருடைய எருமை ஊர்தியுடன் கூப்பிய கையராய் நிற்கிறார். இறைவன் திருவடியைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டிருப்பவர்கள் பக்கம் போகக்கூடாது என்ற ஞான உதயம் அவருக்கு வந்திருக்கும் அல்லவா?

காலசம்ஹாரரை வணங்கி எழுந்தபின் நாம் அமுதகடேசுவரர் சந்நிதிக்குச் செல்லலாம். இந்தச் சந்நிதி முன்புதான் சங்கு மண்டபம் இருக்கிறது. கார்த்திகை மாதம் சோமவாரங்களில் எல்லாம், வலம்புரிச் சங்குடன் கூடிய ஆயிரத்தெட்டு சங்குகளில் தீர்த்தம் நிறைத்து, பூசை முதலியன செய்து அந்தச் சங்கு தீர்த்தத்தைக் கொண்டே அமுதகடேசுவரருக்கு அபிஷேகம் நடக்கும். மார்க் கண்டேயர் இந்த மூர்த்தியைச் சங்காபிஷேகம் செய்தே வழிபட்டார் என்று ஐதீகம். இந்தச் சங்காபிஷேகம் நடக்கும் போது அமுதகடேசுவரரைத் தரிசிக்கும் பேறு கிடைத்தால் லிங்கத் திருவுருவில் அன்று யமன் மார்க்கண்டேயனைச் சுற்றி வீசிய பாசக்கயிற்றின் தழும்பு இருப்பது தெரியும். இந்த அமுதகடேசுவரரை வணங்கிய பின் வெளியே வரலாம். வெளியே வந்த பின் அந்த வெளிப்பிரகாரத்தில் கிழக்கு நோக்கியவராய் இருக்கும் அன்னை அபிராமியைக் கண்டு தொழ அவரது கோயிலுள் நுழையலாம்.

இந்த அபிராமிதான் காலசம்ஹாரரையும் அமுதகடேசுவரரையும் விடப் பிரசித்திபெற்றவள். ஆயுள் விருத்தியை விரும்புபவர் காலனைக் காய்ந்த கடவூர் உறை உத்தமனை வழிபட்டால், வாழ்க்கையில் இடர் உற்று இன்னல் அடைபவர்கள் எல்லாம் அன்னை அபிராமியையே வழிபடுகிறார்கள். சரஸ்வதி தேவியே