பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்

வேனிற் காலம் வந்ததும், 'இப்போது என்ன செய்ய? அவளைப் பஸ் ஸ்டாண்டிலும் காணோம், பள்ளிக்கூடத்திலும் காணோமே? கோடை விடுமுறை போல் இருக்கிறதே!' என்று எம்.ஜி.ஆர். மீசை ஏங்க, ‘அஞ்சற்க, அவள் வீடு எனக்குத் தெரியும். அந்த வீட்டை நான் உனக்குக் காட்டுகிறேன். ஒரு நாள் காலை நீ அந்த வீட்டுக்குப் போ. அவள் தண்ணீர் தெளித்துக் கோலமிடுவதற்காக வெளியே வருவாள். அப்போது நீ மெல்ல அவளை நெருங்கு; 'மாரி போய்க் கோடை வந்துவிட்டது; என் மனத்தை நீ அறியாயோ?' என்று புலம்பு. உடனே அவள் நினைவுக்கு அந்தக் குடைச் சம்பவம் வந்துவிடும்; கலியாணத்துக்குச் சம்மதித்து விடுவாள். அப்புறம் என்ன? வேண்டியவை ஒரு கரிநாள்; நல்ல ராகுகாலம்; ஒலிபெருக்கி; ‘'டும் டும் டும் மாட்டுக்காரன் தெருவில் வாராண்டி!’ என்பது போன்ற ‘டம் டம் டம் பாட்டு ரிகார்டுகள்; இரண்டு ரோஜாப்பூ மாலைகள்; 'தான் மட்டுமே புத்திசாலி' என்று சாதிக்கக் கூடிய ஒரு சீர்திருத்தவாதி-இவ்வளவுதானே?' என்று சிவாஜி மீசை சொல்ல, இன்னொரு மாலை வேண்டாமா, பிரசங்கிக்கு?’ என்று அது கேட்க, 'மறந்துவிட்டேன், மொத்தம் மூன்றாக வாங்கிக் கொண்டால் போச்சு!' என்று இது சொல்லி, அதை அழைத்துக்கொண்டு போய் அவள் வீட்டைக் காட்ட, ‘ஒரு நாள் என்ன, நாளைக் காலையிலேயே நீ என்னை இங்கே பார்க்கலாம்!' என்று எம். ஜி. ஆர். மீசை ஒரு துள்ளுத் துள்ளிவிட்டுத் தன் வீட்டில் 'பெற்ற தோஷ'த்துக்காகப் போட்டு வந்த 'தண்ட சோற்'றை நாடிச் செல்லலாயிற்று.

அடுத்த நாள் காலை பத்மாவதியாகப்பட்டவள் வழக்கம் போல் தண்ணீர் தெளித்துக் கோலமிடுவதற்காகத் தெருவுக்கு வர, எம். ஜி. ஆர். மீசை 'நான் ஆணையிட்டால், அது நடந்துவிட்டால்' என்ற பாட்டை அதற்கேற்ற நடையுடன் சீட்டியடித்துப் பாடிக்கொண்டே அவளுக்கு எதிரே போய்