பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன்

23

‘விடா முயற்சி வெற்றி தரும்' என்று யாரோ ஒரு 'போணி’ ஆகாத தேங்காய்க் கடைக்காரன் எப்போதோ சொல்லி வைத்ததை நம்பி, அவன் ஒன்றன்பின் ஒன்றாகத் தேங்காயை வாங்கிக் கொண்டு வந்து சூறை விடுவதற்காக ஓங்க, அத்தனையையும் அந்த பாதாளம் ‘லபக், லபக்'கென்று பிடுங்கிக் கொள்ள, அதற்கு மேல் என்ன செய்வதென்று தெரியாமல் அவன் விழித்துக் கொண்டு நின்ற போது, அங்கே வந்த ஒரு பெரியவர், ‘என்ன தம்பி, ஏன் ஒரு மாதிரியாயிருக்கிறாய்?' என்று கேட்க, அவன் நடந்ததைச் சொல்ல, ‘இந்த முருங்கை மரத்தின் மேல் பாதாளசாமி, பாதாளசாமி என்று ஒரு பைத்தியக்காரன் இருக்கிறான். அவன் இங்கே வருபவர்களுக்கு இப்படித்தான் ஏதாவது இடையூறு செய்து கொண்டே இருக்கிறான்' என்று பெரியவர் விளக்க, ‘இவ்வளவு பெரிய உலகத்தில் அவனைப் பிடித்து அடக்குவார் யாரும் இல்லையா?' என்று பிள்ளையாண்டான் புலம்ப, 'அவனைப் பிடித்து அடக்க இந்த உலகத்தில் இருவரே உண்டு. அவர்களில் ஒருவர் மிஸ்டர் விக்கிரமாதித்தர் ஏ டு இஸ்ட்; இன்னொருவர் அவருடைய காரியதரிசி சிட்டி!’ என்று பெரியவர் சொல்ல, பிள்ளையாண்டான் எங்கள் விக்கிரமாதித்தரைத் தேடி வந்து முறையிடலாயினன், முறையிடலாயினன், முறையிடலாயினன்....

அவன் குறை கேட்டார் எங்கள் விக்கிரமாதித்தர்; ‘நிவர்த்திப்போம்” என்றார். உடனே புறப்பட்டார் சிட்டியுடன். முருங்கை மரத்தை நெருங்கினார்; ஏறினார். பாய்ந்து பிடித்தார் பாதாளத்தை; இறங்கினார்.

அப்போது, 'உம்மைப் பார்க்க வரும் போஜனிடமும், நீதிதேவனிடமும் உம்முடைய ரிஸப்ஷனிஸ்ட்டுகள் கதை சொல்லும்போது, என்னைப் பிடிக்க வந்த உம்மிடம் மட்டும் நான் ஏன் கதை சொல்லக்கூடாது?’ என்று சாட்சாத் விக்கிரமாதித்தரிடமே அந்த பாதாளம் கேட்க, ‘சொல் அப்பனே, சொல்?’ என்றார் விக்கிரமாதித்தர்.

பாதாளம் சொன்னதாவது: