பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162

கொண்டு விட்டார்கள்; அவ்வளவுதான் விஷயம். குடித்தனம் என்றால் சும்மா நடக்குமா? செலவுக்குப் பணம் வேண்டாமா? அதற்குத்தான் இவன் அடிக்கடி காணாமற் போய்க்கொண்டிருக்கிறான்! இவன் இருக்குமிடத்தை அவ்வப்போது உங்களிடம் வந்து சொல்லி, இவனுக்காக நீங்கள் கொடுக்கும் ரூபாய் ஐந்நூறை வாங்கிக்கொண்டு போய் இவனிடம் கொடுப்பவர்கள் வேறு யாருமில்லை; இவனுடைய நண்பர்கள்தான்!' என்ற விக்கிரமாதித்தர், 'ஏன் தம்பி, அப்படித்தானே?' என்று கோபாலனைக் கேட்க, 'ஆமாம்!' என்று அவன் தலையைக் குனிந்துகொண்டே சொல்ல, ‘கோகிலத்தின் கலியாணத்திபோது ஒரு மொட்டைக் கடிதம் வந்ததே, அதை எழுதியவன்கூட நீதானே?' என்று அவர் பின்னும் கேட்க, ‘நானேதான்!' என்று அவன் பின்னும் சொல்ல, ‘இப்போது எல்லா மர்மங்களும் விளங்கி விட்டன அல்லவா? இனி என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யுங்கள்; ஆனால் ஒன்றை மட்டும் செய்யாதீர்கள். அதாகப்பட்டது, எந்தக் காரணத்தை முன்னிட்டும் இனி இவர்களைப் பிரித்து வைக்காதீர்கள். படிப்பவர்கள் எந்த நிலையிலும் படிப்பார்கள்; படிக்காதவர்கள் என்ன செய்தாலும் படிக்க மாட்டார்கள்!’ என்று சொல்லிவிட்டு விக்கிரமாதித்தர் நடக்க, சிட்டி அவரைத் தொடருவாராயினர்."

மூன்றாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட்டான கோமளம் இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, "நாளைக்கு வாருங்கள்; நான்காவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் கல்யாணி சொல்லும் கதையைக் கேளுங்கள்!’ என்று சொல்ல, "கேட்கிறோம், கேட்கிறோம், கேட்காமல் எங்கே போகப் போகிறோம்?" என்று போஜனும் நீதிதேவனும் வழக்கம் போல் கொட்டாவி விட்டுக்கொண்டே கீழே இறங்குவாராயினர் என்றவாறு... என்றவாறு... என்றவாறு.....