பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

246

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்

கொண்டிருந்த அவர்கள், இப்போது வோட்டுப் போடா விட்டால், அந்த மன்னர்களை உள்ளே தள்ளலாமா, அல்லது அவர்களுக்கு அபராதம் போடலாமா என்று யோசித்துக் கொண்டிருப்பார்களா? எல்லாம் பதவி ருசி, பண ருசியாலே வந்த வினை! நாங்கள்கூட முன்னெல்லாம் நேர்மையாகத் தான் பிழைத்துக் கொண்டிருந்தோம். இப்போது அவர்களைப் பார்த்துத்தான் கெட்டுவிட்டோம். பாவம், நீ யார் பெற்ற பிள்ளையோ, என்னவோ? அந்த எத்தர்களிடம் வகையாக அகப்பட்டுக் கொண்டுவிட்டாய், அதனால் என்ன? இதோ, உன் பங்குக்கு நானும் ஒரு ஐந்து ரூபாய் தருகிறேன். ஓடி விடு! ஓடி விடு! வேறு எந்தக் கட்சிக் காரனாவது வந்து உன்மேல் தன் கட்சிக் கொடியைப் போர்த்திப் பட்டினிச் சாவு பிரசங்கம் செய்வதற்குள்ளே நீ இந்த இடத்தை விட்டு எங்கேயாவது ஓடி விடு, ஒடி விடு!’ என்று என்னை விரட்ட, நானும் அப்படியே ஓடி, முதல் காரியமாக ஓர் ஒட்டலில் நுழைந்து மூக்குப் பிடிக்கச் சாப்பிட்டுவிட்டு, வழக்கம்போல் படுப்பதற்கு எழும்பூர் ஸ்டேஷனைத் தஞ்சமடைந்தேன்.

பொழுது விடிந்தது; அன்றையக் காலைப் பத்திரிகையில் வந்திருந்த ஒரு செய்தி என்னை ஆனந்தக் கடலில் ஆழ்த்தியது. ஆளுங் கட்சியைச் சேர்ந்த யாரோ ஒரு நடிகர், ‘எங்கள் ஆட்சியிலா பட்டினிச் சாவு? இருக்காது; இருக்கவே இருக்காது. அப்படியே இருந்தாலும் அதற்குக் காரணம் டில்லியாய்த்தான் இருக்க வேண்டும். அதனால் என்ன, எதிர்க்கட்சிக்காரர்களைப் போல அதை நாங்கள் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். அடிப்படைப் பிரச்னை தீரும்போது தீரட்டும்; அதற்காகக் கிடைத்த சந்தர்ப்பத்தை நான் நழுவ விட மாட்டேன். இதோ, பட்டினியால் செத்துப் போன அந்தப் பரிதாபத்துக்குரியவனின் குடும்பத்துக்கு நான் ரூபாய் இரண்டாயிரம் தருகிறேன்!' என்று அதில் அறிவித்திருந்தார். மகிழ்ச்சிக்குரிய அந்தச் செய்தியை அப்பாவிடம் சொல்லி, அதைக் கொண்டு அவர் தங்கைக்கு மணம்