பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

280

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்

கொடுக்கலாமென்று நினைத்து அவளைப் பார்த்தேன்; அதற்குள்... அதற்குள்...’ என்று அவனும் மென்று விழுங்க, 'அதற்குள் என்ன, வெட்கம் வந்துவிட்டதா?’ என்று அவர் சிரிக்க, 'ஆமாம்' என்பதுபோல் அவன் சற்றே நெளிய, ‘ஆண்கள் இப்படி வெட்கப்பட ஆரம்பித்துத்தானே பெண்கள் வெட்கப்படுவதையே விட்டுவிட்டார்கள்!’ என்று சொல்லிக் கொண்டே அவர் அவனிடமிருந்த சாவியை வாங்கிக் கொண்டு, ‘வாடி, போவோம்; வாம்மா, போவோம்!’ என்ற தம் மனைவியாகப்பட்டவளையும் மகளாகப்பட்டவளையும் அழைத்துக்கொண்டு, 'காற்று வாங்கியது போதும்!' என்று காரை நோக்கி விறுவிறுவென்று நடப்பாராயினர்.

வீட்டுக்கு வந்த தாரா, 'வள்ளுவன் தன்னை இப்படியா கை விடுவான்?' என்று எண்ணிப் 'புஸ்ஸ்ஸ்' என்று பெருமூச்சுவிட, அதைக் கவனித்த அவள் தகப்பனார், 'இனி தாங்காது!’ என்று தம் மனைவியின் காதோடு காதாகக் கவலையோடு சொல்ல, 'ஆமாம், தாங்காது!’ என்று அவளும் அவருடைய காதோடு காதாகக் கவலையோடு சொல்லிவிட்டு, 'ஹா'லில் இருந்த 'பே'னைத் தன் ‘கண்மணி'க்காக முழு வேகத்தில் முடுக்கி விடுவாளாயினள்.

'மேலே என்ன செய்வது?' என்றார் தகப்பனார்; ‘கலியாணம்தான்!' என்றாள் தாயார். 'அதற்குத்தான் நீ இடம் கொடுக்க மாட்டேன் என்கிறாயே?’ என்றார் அவர்; 'நீங்கள் இடம் கொடுத்தால் நானும் இடம் கொடுப்பேன்!' என்றாள் அவள். 'இப்படியே போய்க் கொண்டிருந்தால் முடிவு?' என்றார் தகப்பனார்; 'இருக்கிறது’ என்றாள் தாயார். 'எங்கே இருக்கிறது?’ என்றார் அவர்; 'இருக்கவே இருக்கிறார் மிஸ்டர் விக்கிரமாதித்தர். அவரிடம் வேண்டுமானால் இந்த முடிவை விட்டுவிடுங்கள்; அதற்கு நான் கட்டுப்படத் தயார்!’ என்றாள் அவள். ‘சரி' என்றார் தகப்பனார்; 'உடனே போய் அவரை அழைத்து வாருங்கள்!’ என்றாள் தாயார்.