பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

196

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்

தான் அவர்கள் எல்லோருடைய குடிகளையும் நான் எப்பொழுதோ கெடுத்திருப்பேனே!' என்று 'பொய்ச்சகுனி' கையைச் பிசைய, 'சரி, வாரும் போவோம்!' என்று விக்கிரமாதித்தர் 'சகுனி'யை முன்னால் நடக்க விட்டுவிட்டு, அவருக்குப் பின்னால் தாம் நடப்பாராயினர்.

அங்கே போனதும் திரெளபதி வேடம் தரித்திருந்த நடிகையைச் சந்தித்து, ‘உங்கள் பெயர் என்ன, அம்மா?' என்று அவர் விசாரிக்க, 'ஜிம்கானா ஜில்லு’ என்று அவள் சற்றே நெளிந்து சொல்ல, 'பெயரைக் கேட்கும்போதே என் உடம்பெல்லாம் குளிருகிறதே!' என்று தம்மையறியாமல் குலுங்கிய தம் உடம்பை அவர் தாமே 'ஒரு பிடி' பிடித்து விட்டுக் கொள்ள, அவள் ஓர் 'ஐஸ் கிரீம்' சிரிப்புச் சிரித்து, ‘என் பெயர் லலிதகலாதான், ஸார்! நான் ஒரு சினிமாவிலே ‘ஜிம்கானா ஜில்லு, நான் ரெளண்டானா லல்லு!' என்று ‘காமெடி ஸாங்க்' ஒன்று 'ஸாங்கி'னேன்; அது ஒரே ‘பாப்புரல’ராப் போச்சு. அதிலிருந்து என் பெயர் 'ஜிம்கானா ஜில்' என்று ஆகிவிட்டது, ஸார்!' என்று சொல்ல, 'ஓஹோ, அப்படியா? தருமர் வேடம் தாங்கியிருக்கும் தலைவர் ஏன் அம்மா, உங்களைச் சூதாட்டத்தில் பந்தயமாக வைத்துத் தோற்கமாட்டேன் என்கிறார்?’ என்று விக்கிரமாதித்தர் பின்னும் கேட்க, 'அவருக்கு என்மேலே லவ் ஸார்!’ என்று அவள் பின்னும் கொஞ்சம் வெட்கத்துடன் சொல்லி, 'நெளி, நெளி' என்று நெளிய, 'என்னது, என்னது?' என்று விக்கிரமாதித்தர் திகைக்க, 'அதைத் தமிழிலே சொன்னா எனக்கு இன்னும் வெட்கமாயிருக்கும், ஸார்! அவருக்கு என்மேலே லவ்வு!' என்று அவள் மீண்டும் ஒருமுறை அதை இங்கிலீஷிலேயே சொல்லிவிட்டு, வாய்க்குள் சட்டென்று ஆள்காட்டி விரலை எடுத்து வைத்துக்கொண்டு அப்படியும் இப்படியுமாக 'ஆடு, ஆடு’ என்று ஆடுவாளாயினள்.

‘சரி, தருமருக்குத்தான் உங்கள் மேலே லவ்; துச்சாதனனுக்கு?'