பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

170

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்


‘யாரைப் பார்க்கிறீர்கள்?’ என்று அங்கிருந்த ஒருவன் அவரைக் கேட்க, ‘இங்கே ஒரு பைத்தியக்காரன் இருந்தானே, அவனைப் பார்த்தீர்களா?' என்று அவர் அவனைக் கேட்க, 'அதோ, அவன் அந்தக் குதிரை வண்டிக்குப் பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறான்!' என்று அவன் அந்தப் பைத்தியம் சென்ற திசையை அவருக்குச் சுட்டிக் காட்டுவானாயினன்.

‘அவனைப் பிடிக்க என்ன வழி?’ என்று ஒரு வழியும் தோன்றாமல் விக்கிரமாதித்தர் அப்படியே நிற்க, அந்தச் சமயத்தில் பாதாளசாமி காருடன் அவருக்குப் பின்னால் வந்து நின்று, அவர் ஏறுவதற்காகக் காரின் கதவைத் திறந்து விட, ‘நல்ல சமயத்தில் வந்தாய்!' என்று அவர் அதில் ஏறிக்கொண்டு, 'அதோ போகிறது பார், ஒரு குதிரை வண்டி! அதற்குப் பின்னால் ஒருவன் தலை தெறிக்க ஓடிக்கொண்டிருக்கிறான் அல்லவா? அவனைப் பிடி!’ என்று சொல்ல, பாதாளசாமி ஒரே தூக்கில் வண்டியைக் கொண்டு போய் அவனுக்கு அருகே நிறுத்த, அதைக் கண்டதும், ‘ஐயா, ஐயா! என்னைக் கொஞ்சம் ஏற்றிக்கொண்டு போய் என் அத்தை மகளிடம் விட்டுவிடுகிறீர்களா, ஐயா?' என்று அவனாகவே அவர்களைக் கேட்க, 'அதற்கென்ன, ஏறிக் கொள்!' என்று அவனை வண்டியில் ஏற்றிக்கொண்டு, அவர்கள் அந்தக் குதிரை வண்டியைத் தொடர்ந்து செல்வாராயினர்.

வழியில், 'அத்தை மகள்தான் ஆண் வாடையே கூடாது என்கிறாளே, அவளிடம் நீ ஏன் போகவேண்டும் என்கிறாய்?' என்று விக்கிரமாதித்தர் கேட்க, ‘போனால் கழுத்தைப் பிடித்தாவது வெளியே தள்ள மாட்டாளா, அதனாலாவது பட்டுப் போன்ற அவள் கை என்மேல் படாதா? என்ற ஆசையால்தான்!' என்று அவன் ஏக்கத்தோடு சொல்ல, ‘அதெல்லாம் வேண்டாம். நான் சொல்கிறபடி செய்; அவள் உன்னைக் கலியாணம் செய்துகொண்டு விடுவாள்!' என்று விக்கிரமாதித்தர் சொல்ல, 'நிஜமாகவா, நிஜமாகவா?' என்று