பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86 புலவர் கா. கோவிந்தன்



அரசமாதேவியின் பிரிவைப் பொறுக்க முடியாது போயிற்று. மேலும், அவள் வறிதே பிரியாது, பெருஞ்சினம் கொண்டு பிரிந்து போனாள். ஆகவே அவள் சினம் போக்கி, அவள் அன்பைப் பெறும் விழைவோடு அவள் அரண்மனை நோக்கி விரைந்து சென்றான்.

அரசன் அரசியாரின் அரண்மனை வாயிலுட் புகும் அந்நேரத்தில், ஆங்கு, அரசர்க்கு அணிகலன் ஆக்கித் தரும் பொற்கொல்லன் வந்து வீழ்ந்து வணங்கினான். அரசன் வினவா முன்னரே, “அரசே! நம் தேவியாரின் காற்சிலம்பைக் களவாடிய கள்வன், சிலம்போடு என் இல்லின்கண் உள்ளான். அதை உணர்த்தவே ஓடோடி வந்துள்ளேன்,” என உரைத்தான். அரசியாரின் ஊடலைத் தீர்க்க விரும்பும் ஆர்வத்தோடு செல்லும் அரசன் அவ்வார்வ மிகுதியாலும், ஊடல் தீர்க்கச் செல்லும் தனக்குக் காணாமற் போய்க் கிடைக்கும் அவள் காற்சிலம்பு நல்ல துணையாம் என எண்ணிய எண்ணத்தாலும், அறிவு மயங்கி, ஊர்க் காவலரை அழைத்து, “இவன் கூறும் கள்வன் கையில் காற்சிலம்பு இருக்குமேல், அவனைக் கொன்று, அச் சிலம்பினைக் கொணர்க” எனப் பணித்து விட்டான்.

காவலரைக் கூட்டிச் சென்ற பொற்கொல்லன், தன் மனையில் தங்கியிருந்த கோவலனை அவர்க்குக் காட்டி, அவனே கள்வன் என்று கூறி, அவனைக் கொன்று சிலம்பினைக் கொண்டு செல்லுமாறு செய்துவிட்டான். கோவலன் கொலையுண்டான்; கண்ணகியின் காற்சிலம்பு மன்னவன் மனைவியால்