பக்கம்:கபாடபுரம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

கபாடபுரம்


ஒருவர் முதுமை தமக்களித்திருக்கும் உரிமையோடும் துணிவோடும் கூறியபோது கூட்டத்தில் சிரிப்பொலி அலை அலையாக எழுந்தது.

சிரிப்புக்குக் காரணமாயிருந்தவளோ நாணித் தலை கவிழ்ந்தாள். இந்த நிலையில் உடனிருந்த முடிநாகனுக்கோ தன் ஆவலைச் சிறிதும் அடக்க முடியவில்லை. அந்தக் கூட்டத்தினரையும், விண் மீன்களுக்கிடையே முழுநிலவு தளர்ந்து கிடப்பதுபோல் துவண்டு நிற்கும் அந்தப் பெண்ணையும் நோக்கி, "பாண் மக்களே! விறலியர்களே பேரழகு வாய்ந்த இசைச் செல்வியே! நீங்கள் எல்லோரும் காணத் தவித்துக் கொண்டிருக்கும் இளைய பாண்டியர் சாரகுமாரரைத்தான் இப்போது உங்களருகே காண்கிறீர்கள்" - என்று சொல்லி அவர்களுடைய முக மலர்ச்சியையும், மன மகிழ்ச்சியையும், அன்பையும் அந்தக் கணமே இளையபாண்டியர் நேருக்கு நேராகப் பெறும்படி செய்துவிட வேண்டும் போல முடிநாகனின் நாவும் இதழ்களும் முந்தின.

ஆனால் முடிநாகனுக்கு அந்த வேளையில் அந்தச் சூழ்நிலையில் அப்படி ஒர் ஆவல் வருவது இயல்பு என்பதை முன்பே அதுமானித்திருந்த இளையபாண்டியர், அதைச் சொல்ல வேண்டாம் - என்ற பாவனையில் சைகை செய்து அவனது ஆவலை அடக்கிவிட்டார். இராச கம்பீரத்துக் குரிய பொற்கோலங்களும், அலங்கார்ப் புனைவுகளுமின்றித் தொன் பாண்டி நாட்டின் பல்லாயிரம் க்ஷத்திரிய இளைஞர்களில் சற்றே அழகு மிகுந்த ஒர் இளைஞனைப் போலவே அந்தக் குருகுலவாசத் தோற்றத்தில் இளைய பாண்டியர் இருந்ததனால் அவர்களாலும் அவரைக் கண்டு கொள்ள முடியவில்லை. தன்னைக் காட்டிலும் பருவத்தில் மிக மிக இளையவளாகத் தோன்றிய அந்தப் பெண்ணை நோக்கி, "உன் பெயர் என்னவென்று எனக்குச் சொல்வாயா பெண்னே?" - என்று உரிமையோடும் பாசத்தோடும் கனிவாய் வினாவினான் சாரகுமாரன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/28&oldid=489927" இலிருந்து மீள்விக்கப்பட்டது