பக்கம்:கபாடபுரம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

41


பாட்டனாரின் எச்சரிக்கையை எண்ணி இளைய பாண்டியன் தனக்குள் சிரித்துக்கொண்டான். நிலா உதயத்துக்குப் பின் ஒரிரு நாழிகைகளில் தேர் உலாப் புறப்பட்டது முதலில் செல்லவேண்டிய தேர்கள் எல்லாம் சென்ற பின் இளைய பாண்டியருடைய தேர் புறப்பட வேண்டிய முறைப்படி அதைப் புறப்படச் செய்து ஒட்டிக்கொண்டு நுழைவாயிலுக்குக் கொண்டு வந்தான் முடிநாகன். அன்றைக்குக் கூடியிருந்த கூட்டத்தினரில் பெரும்பகுதியினர் இளையபாண்டியர் சாரகுமாரரைக் காண்பதற்காகவே இடித்து நெருக்கிக் கொண்டு கூடியிருந்தார்கள். ஆதலால் அவருடைய தேர், கோட்டத்தின் நுழைவாயில் வழியே வெளியே வர இருப்பதைப் பல்லாயிரக் கணக்கான விழிகள் ஆவலோடு எதிர் பார்த்த வண்ணமாக இருந்தன.

அப்படி ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களில் இளைஞர்களும் இருந்தார்கள். முதியவர்களும் இருந்தார்கள். பெண்களும் இருந்தார்கள். ஆண்களும் இருந்தார்கள். இளம் பெண்களும் இருந்தார்கள். முதிய தாய்மார்களும் இருந்தார்கள். நடுத்தர வயதினரும் இருந்தார்கள். காளைகளும் இருந்தார்கள். தளர்ந்து முதிர்ந்த கிழவர்களுமிருந்தார்கள். இளம் பெண்கள் இளைய பாண்டியரின் பேரழகைக் கேள்விப்பட்டுக் கூடியிருந்தார்கள் என்றால் இப்படி அந்த இளம் பெண்களின் ஆவலுக் கெல்லாம் காரணமென்ன என்ற இரகசியத்தை அறியக் கூடியிருந்தார்கள் முதியவர்கள். அந்த முதியவர்களே எப்போதோ வாய் தவறி நமது இளவரசர் சாரகுமாரரைப்போல் சுந்தர வாலிபர் ஈரேழு பதினான்கு புவனங்களிலும் இல்லை - என்று புகழ்ந்ததை ஞாபகமாக நினைவு வைத்திருந்துதான் இத்தனை இளம் பெண்களும் இங்கே கூடினார்கள் என்ற இரகசியத்தை முதியவர்கள் அத்தனை பேரும் இப்போது மறந்தவர்களாகக் காணப்பட்டார்கள்.

இது தவிர இளைய பாண்டியரின் இசைக் கலைத் திறனைக் கேள்விப்பட்டுக் கூடியவர்கள் பலர். அவருடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/43&oldid=489942" இலிருந்து மீள்விக்கப்பட்டது