பக்கம்:கபாடபுரம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

47


படகுகளிலும்கூட விளக்குகள் மின்னிக் கடலிலும் ஒரு பெரு நகரம் உருவாகிவிட்டது போன்ற தோற்றத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தன.

இந்த நகரணி மங்கல விழா நாளில் மட்டும் தேச தேசாந்தரங்களிலிருந்து வரும் யாத்திரீகர்களுக்கும், வணிகர்களுக்கும், தென்பழந் தீவுகளிலிருந்து வரும் கடற் குறும்பர்களுக்கும் கூடச் சுங்கக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருந்தன. பிற நாடுகளிலிருந்து பண்டங்களைக் கொண்டுவந்து விற்போருக்கும் கபாடபுரத்திலிருந்து முத்துக்களையும், இரத்தினங்களையும் கொள்முதல் செய்துகொண்டு போகிறவர்களுக்கும் இந்த விழா நாட்களில் வாணிகம் செய்வதற்கு வசதிகள் அதிகமாயிருந்தன.

தென் பழந்தீவுகளில் வசித்துவந்த முரட்டுக் குடிமக்களான கடற் குறும்பர்கள் குருதிவெறி பிடித்தவர்களாயிருந்தும் ஒவ்வோராண்டும் கபாடபுரத்து நகரணி மங்கல விழாவில் ஏதாவது கலகமூட்டிவிட்டுச் செல்லும் வழக்கத்தை அவர்கள் மேற்கொண்டிருந்தும், அவர்களுக்குத் தடைவிதிக்காது விட்டிருந்ததற்குக் காரணம் பெரியபாண்டியர் வெண்தேர்ச்செழியரின் பெருந்தன்மையும் அநாகுல பாண்டியரின் துணிவுமே என்று கபாடபுரத்து மக்கள் அறிந்திருந்தனர்.

வேறு நாடுகளிலிருந்து கபாடபுரத்துக்கு வரும் கப்பல்களுக்கும், கபாடபுரத்திலிருந்து வேறு நாடுகளுக்குச் செல்லும் கப்பல்களுக்கும் தென்பழந்தீவுகளைக் கடக்க நேரும் போது இந்தக் கடற் குறும்பர்களால் விளையும் தொல்லைகளும் வேதனைகளும் நீண்டகாலமாகத் தவிர்க்கமுடியாதபடி இருந்தன. வெண்தேர்ச்செழிய மாமன்னர் காலத்திலும் அநாகுல பாண்டியர் காலத்திலும் ஒரளவு அடக்கி ஒடுக்கப்பட்ட பின்பும் இவர்களுடைய கொலை வெறியோ, கொள்ளை வெறியோ தணியாமல் அவ்வப்போது தலையெடுப்பதும் மறைவதுமாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/49&oldid=489948" இலிருந்து மீள்விக்கப்பட்டது