பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
1

அந்த நிசப்தமே அங்கு ஒரு கெளரவமான சூழ்நிலையைப் படைத்துக் கொடுப்பதாக இருந்தது. ஒரு மனிதனுடைய பிரவேசம் பல மனிதர்களுடைய பேச்சுக்களையும், குரல் விகாரங்களையும் ஒடுக்கி நிசப்தத்தைப் படைப்பது அந்த ஒரு மனிதனுக்கு அளிக்கப்படும் மரியாதையாகவும் இருக்கலாம்: பயமாகவும் இருக்கலாம். மரியாதையா, பயமா என்று விவாதித்து முடிவு காண்பதைவிட அந்த நிசப்தம் யாரோ ஒருவன் பலரிடமிருந்து ஒரே சமயத்தில் அடைகிற இரகசியமான வெற்றி என்று சுருக்கமாகச் சொல்லி விடலாம்.

பலரிடையே ஆரவாரத்தையும், கிளர்ச்சியையும் படைக்க முடிகிறவன் எப்படித் தலைவனாகி விடுகிறானோ அப்படியே, சிலரிடையே நிசப்தத்தைப் படைக்கிறவனும் ஒரு தலைவன்தான். சொல்லப்போனால் நிசப்தத்திலிருந்துதான் ஆரவாரமே பிறக்கிறது. ஆரவாரத்துக்கு முந்திய நிசப்தம்தான் அந்த ஆரவாரத்தையே பிரித்துணர அடிக்கோடு போட்டுத் தருகிறது. மெளனத்தின் மறுபுறம்தான் ஆரவாரம். ஆரவாரத்தின் மறுபுறம் தான் மெளனம். பலரை நிசப்தமாக்கிவிட்டுத் தான் மட்டும் உரத்த குரலில் பேசுகிற ஒருவன் எப்படித் தலைவனோ அப்படியே, சிலரை நிசப்தமாக்கிவிட்டு அந்தச் சிலரின் மரியாதையை மெளனமாக வெல்கிறவனும் ஒரு தலைவன்தான்.

இருபத்தைந்து முப்பது பேர் வேலை பார்க்கும் ஒரு வியாபார நிறுவனத்தின் உரிமையாளர் என்ற முறையில் பார்த்தால் கமலக்கண்ணன் அப்படி ஒன்றும் படாடோபமானவரோ, பகட்டுப் பேர் வழியோ இல்லை. படாடோபம், பகட்டு, பணச்செழிப்பு, அதிகார முதன்மை எல்லாவற்றையும் தவிரவும் கூடச் சில மனிதர்களின் தோற்றமே, சுற்றியிருப்பவர்களை எழுந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/9&oldid=1015990" இலிருந்து மீள்விக்கப்பட்டது