பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

நெஞ்சக்கனல்

போய்க் கூட்டிக்கிட்டு வரவேண்டியிருக்கும்...” என்றார் கமலக்கண்ணன். .

“சரிங்க... எனக்கு நல்லா நினைவிருக்கு. கெல்லீஸ், போற வழிலே ஒரு சந்திலே இருக்காருங்க...”– என்று மீண்டும் தலையைச் சொரிந்தான் டிரைவர்.

“அதோட இன்னொரு விஷயம் முனிசாமி! திண்டிவனத்துக்குப் பக்கத்திலே ஒரு சின்னக்கிராமத்திலே அடுத்த வாரம் ஒரு ஆண்டுவிழா இருக்கு. அதுலே நான் தலைமை வகிச்சுப்பேசப்போறேன். அந்த ஊருக்கு மெயின்ரோடிலே இருந்துவிலகிப்பக்கத்திலே சின்னரோடிலே போகவேண்டியிருக்கும் போலிருக்கு. அதுனாலே நீதான் சின்னக்காரை எடுத்துக்கிட்டு எங்கூட வரணும்”– என்றார் கமலக்கண்ணன்.அப்படிச்சொல்லியதன் மூலம் அவர் நினைவில் இடைவிடாமல் அந்தக் காந்திய சமதர்ம சேவா சங்கமும் அதனுடைய ஆண்டுவிழாவும், அந்த ஆண்டுவிழாவில் தாம் தலைமை வகித்துப்பேச இருப்பதையும் அந்தப் பேச்சைத் தாம் தயாரித்திருக்கும் விதத்தையும் அது மேடையில், பேசப்படும்போது பலர் கைதட்டப்போவதையும் எண்ணி எண்ணிக் கற்பனைகளிலும் சுகங்களிலும் மூழ்கிக் கொள் ளும் நிலைமை இருப்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.

“நீங்களா? மேடையிலே தமிழிலே பேசப்போlங்க?” என்று ஒரு விநாடி பெர்ரிமேஸ்னிலிருந்து தலையை நீட்டி விசாரித்தாள் மிஸஸ் கமலக்கண்ணன்.

“ஏன்? அதிலென்ன சந்தேகம்? நான்தான் பேசப்போகிறேன். நீயும்கூட வாயேன். மிஸஸ் கமலக்கண்ணனும் இந்தக் கூட்டத்திற்குவந்து சிறப்பித்ததற்காக எங்கள் சங்கத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்”— என்று உனக்கும் சேர்த்துக்கூட அந்தக் கூட்டத்தில் நன்றி கூறுவார்கள். நான் இனிமே தலைமை தாங்கல், சொற்பொழிவு செய்வது எல்லாத்துக்கும் ஒப்புக்கொள்ளலாம்னு நினைக்கிறேன்.நீயும்கூட அதுக்கு ஒத்துழைக்கனும், நான் பிரமுகராகறதுன்னா அதற்கு நீயும் உதவி செய்தால் தான் முடியும். ‘மிஸஸ் கமலக்கண்ணன் பரிசு வழங்குவார்’— என்று நிகழ்ச்சி நிரலில் உன் பெயரைப் போட்டால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/34&oldid=1036079" இலிருந்து மீள்விக்கப்பட்டது