பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

31

மெடுத்தான் டிரைவர் கார்க் கதவைப் பயந்துகொண்டே அடைத்திருந்தார் புலவர், அதை மறுபடியும் திறந்து நன்றாக அடைத்துக்கொள்கிற சாக்கில் படிரென்று அறைந்து அடைத்தான் டிரைவர் புலவருக்கோ அப்படிச்செய்வதன் மூலம் அவன் கோபமாகத் தன் முகத்திலறைவதுபோலிருந்தது அவருக்கு டிரைவர்மேல் கோபம்கூட வந்தது. சமயம் வாய்க்கும்போது அந்த ‘டிரைவனை’ப் பற்றிக் கமலக்கண்ணனிடம் ஒரு வார்த்தைப் போட்டுவைக்க வேண்டுமென்றும் எண்ணிக்கொண்டார் புலவர்.

டிரைவர் புலவரை இறக்கிவிட்டுப்புறப்பட்ட இடமாகிய கம்பெனி அலுவலகத்துக்குப் போகாமல் இராயப்பேட்டையிலிருந்த கமலக்கண்ணனின் பங்களாவுக்குத் திரும்பிப் போனான். கமலக்கண்ணன் பெரிய காரில் கம்பெனியிலிருந்து வீட்டுக்கு வந்திருந்தார். அலுவலக உடைகளை எல்லாம்கழற்றிவிட்டு ஒரு சாதாரணவேஷ்டி ஜிப்பா அணிந்து முன் ஹாலில் உட்கார்ந்து சிகரெட் புகைத்துக்கொண்டிருந்தார் கமலக்கண்ணன். அவருடைய இன்னொரு கையில் அந்தப் பிரசங்கம் எழுதிய தாள்களின் கத்தை இருந்தது.

பள்ளிக்கூடத்தில் சேரப்போகிற நாளை எண்ணும் ஒரு சிறு குழந்தை அல்லது திருமண நாளை கற்பனைச் செய்யும் ஒரு பட்டிக்காட்டு மணப்பெண்ணைப் போன்ற மனநிலையில் தமது முதற் பிரசங்கம்பற்றிய சிரத்தையான தயாரிப்புக்களில் ஈடுபட்டிருந்தார் அந்த வியாபாரி. நவநாகரிகப் பெண்மணியும் தோற்றத்தில் அவருடைய மகளைப்போன்ற அவ்வளவு இளமையுடையவளுமான அவர் மனைவி எதிரே இன்னொரு சோபாவில் அமர்ந்துபுதிதாக வந்திருந்த ‘பெர்ரிமேஸ்னை’ப் படித்துக்கொண்டிருந்தாள்.

புலவர் வீட்டிலிருந்து திரும்பிய டிரைவர் வண்டியைப் போர்டிகோவில் விட்டுவிட்டுத் தயங்கித் தயங்கி உள்ளே, வந்து ஹால் கதவோரமாக நின்று தலையைச் சொரிந்தான்.

“அவரைக் கொண்டுபோய் விட்டாச்சுங்க...”

‘ரொம்ப, சரி! வீடு இருக்கிற இடத்தை நல்லா ஞாபகம் வச்சிக்கோ முனிசாமி! அடிக்கடி நீதான் அவரைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/33&oldid=1036077" இலிருந்து மீள்விக்கப்பட்டது