பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

நெஞ்சக்கனல்

நிற்கவும், அதுவரை பேசிக்கொண்டிருந்த கலகலப்பான பேச்சிலிருந்து விடுபட்டு மெளனமடையவும் செய்வதுண்டே; அப்படிச் செய்கிற சக்தி கமலக்கண்ணனிடமிருந்தது. அவரைப்போல் பரம்பரையான பணக்காரக் குடும்பத்தில் வந்தவர்களுக்கு இப்படி மனிதர்களை ஆள்கிற தன்மையும் ஒருவேளை பரம்பரையாகவே வந்து விடுகிறதோ என்னவோ? ‘பணத்தை ஆள்கிறவர்களும், பதவியை ஆள்கிறவர்களும் அவற்றின் மூலமாக அதிகாரங்களை ஆள்கிறவர்களுமே இந்த விநாடி வரை மனிதர்களையும் ஆள்கிறார்கள் போலிருக்கிறதே’–என்று சொன்னால் சமதர்மம் மலருகிற நாட்டில்–சமதர்மம் மலருகிற நாட்களில் அது கேட்பதற்குக் கொஞ்சம் கசப்பாகத்தான் இருக்கிறது. என்ன செய்யலாம்? கசப்பாக இருந்தாலும் உண்மை, உண்மைதானே? எவ்வளவுக்கெவ்வளவு கசப்பாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு கசப்பதினாலேயே அது உண்மை என்று இனங் கண்டு கொள்ளப் பழகிவிட்டால் அப்புறம் கவலையில்லை, கசப்புமிருக்காது.

சராசரியாக நீங்கள் பார்த்திருக்கிற எல்லாப் பெரிய முதலாளிகளையும் போல்தான் கமலக்கண்ணனும் நீண்ட பெரிய காரில் பின் ஸீட்டின் இடது கோடியில் ஒரமாக உட்கார்ந்து ஒற்றைத் தனி ஆளாகச் சவாரி செய்து நாள் தவறாமல் காலை பதினோரு மணிக்கு அலுவலகம் வருவார். போர்டிகோவில் டிரைவர் பரபரப்பாக விரைந்து முன்னிறங்கிக் கார்க் கதவைத் திறந்து விட்டதும், மெதுவாகக் கீழே இறங்கி எதிரே மரம்போல் விறைத்து நின்று சலாம் வைக்கும் கூர்க்காவைக் கடந்து உள்ளே செல்வார். குளிர்சாதனம் செய்யப்பட்ட தமது அறைக்குள் நுழைவார். அமர்வார். டெலிபோன் பேசுவார். செக் புத்தகத்தில் கையெழுத்துப் போடுவார். கடித்ங்களை ‘டிக்டேட்’ செய்வார். ஸ்டெனோ சுத்தமாக டைப் செய்துகொண்டு வந்த கடிதத்தில் கீழே கடைசியாக அசுத்தமான தன் கையெழுத்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/10&oldid=1015991" இலிருந்து மீள்விக்கப்பட்டது