பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

15


களுக்கு நாட்டியம், சங்கீதம் கற்பித்தல், இவையெல்லாம் அடங்கிய ஓர் அஞ்சறைப் பெட்டி ஞானம் வேண்டும். இவற்றில் சில அம்சங்கள் நம் கமலக்கண்ணன் அவர்களிடமும் இருந்தன. எதிலும் தீவிர விருப்பு வெறுப்பு இருக்காது. பக்தியிலிருந்து பரதநாட்டியம்வரை ‘டோக்கனா’க ஓர் உணர்வு இருக்கவேண்டுமே ஒழிய முழுமையாகவோ, தீவிரமாகவோ, எதிலும் ஈடுபட்டுவிடக்கூடாது என்பது இந்தப் பணக்காரக் குடும்பங்களில் ஒரு வழக்கம். காரணமில்லாத பலவற்றில் நிறையச் செலவழிப்பதும் காரணமுள்ளவற்றில் செலவழிக்காமலே விட்டுவிடுவதும் கூட இவர்களிடம் சகஜமான சுபாவமாக இருக்கும். அப்பனும் மகனும் பேசிக்கொள்ளும் போதுகளில், கணவனும், மனைவியும் பேசிக்கொள்ளும் போதுகளில்கூடத் தாய்மொழியில் பேசாமல் இருப்பதும் ஒரு பெருமை இவர்களுக்கு. சாதாரண மக்களின் வாழ்க்கையில் தெருவில், வீதியில் உள்ளவர்களின் சுகதுக்கங்கள் தெரியாத இப்படிப்பட்ட குடும்பங்களிலிருந்துதான் பெரும்பாலான இந்திய அரசியல்வாதிகளும், உயர்தர உத்தியோகஸ்தர்களும் வருகிறார்கள் என்று சிலர் குறைபட்டுக் கொள்கிறார்களே, அதில் நியாயமும் இருக்கலாம் இல்லாமலும் போகலாம். சமூக வாழ்வில் தீவிர மாறுதல்கள் நிகழ வேண்டுமானால், இப்படிப்பட்ட அஞ்சறைப் பெட்டி ஞானமுள்ளவர்கள் குறைய வேண்டும். எந்தத் துறையிலும் ஆழ்ந்த பற்றோ அநுபவமோ இல்லாமல் எல்லாத் துறையிலுமே ஆழ்ந்த பற்றும் அநுபவமும் இருப்பவர்களைப்போல் நடிப்பவர்கள் பெருகி வருவதுதான் இந்த நூற்றாண்டின் இந்திய வாழ்க்கையில் பெரிய குறைபாடு என்பதை நாம் உணர்ந்து தீர வேண்டிய நிலையில் இருப்பதைத்தான் இது காண்பிக்கிறது. அவசர உபயோகத்துக்காக அடுப்படியில் வைத்துக் கொள்ள ஏற்ற முறையில் கொஞ்சம் கடுகு, கொஞ்சம் மிளகாய், கொஞ்சம் பருப்பு என்று போட்டு வைத்துக் கொள்ளும் அஞ்சறைப் பெட்டிபோல் எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் இரசனை உள்ளவர்கள்தான் இன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெஞ்சக்கனல்.pdf/17&oldid=1016002" இலிருந்து மீள்விக்கப்பட்டது