பக்கம்:கல்வி எனும் கண்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்வி எனும் கண்

23



அறிய ஆறுதல் பிறக்கிறது. அவர்களை வாழ்த்தியும் பாராட்டியும் கடிதங்கள் எழுதினேன். விரைந்து செய்வார்கள் என நம்புகிறேன். அடுத்த கல்வியாண்டிலேயே (1992-93) அது செயலாக்கப்பெறும் என நம்புகிறேன்.

பாடநூல்களை இன்று அரசாங்கமே வெளியிடுகிறது. அந்த வெளியீட்டகம் பெரிய பத்து மாடிக் கட்டடமும் கட்டிக்கொண்டு சிறக்க வாழ்கின்றது. ஆயினும் பாடங்களைப் பயிற்றும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் நல்ல நூல்களைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இல்லை. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஒரே வகையான நூலைத்தான் படிக்க வேண்டியுள்ளது. முன்பெல்லாம்-கால்நூற்றாண்டுக்கு முன் பல பதிப்பாளர்கள்-நூற்றுக்கு மேல் இருப்பர் என எண்ணுகிறேன். மொழிப்பாடங்கள் உட்பட நல்ல பாடநூல்களை எழுதினார்கள்-வெளியிட்டார்கள். பல தெளிந்த அறிவும் மதிநுட்பமும் உடைய ஆசிரியர்கள் நூல்கள் எழுத வாய்ப்பு இருந்தது. அப்படியே பதிப்பகத்தாரும் தரமான நூல்களை வெளிக்கொணர முடிந்தது. அவற்றை ஆராய ஒவ்வொரு பாடத்திற்கும் வல்லுனர்குழுக்கள் அமைத்து, நல்லனவற்றைக் கொண்டு, அல்லனவற்றைத் தள்ளினர். பள்ளிகளிலும் நல்லனவற்றை ஆராய்ந்தெடுத்து, சிறக்கக் கல்வியினை-எல்லாப் பாடங்களையும் கற்றுத் தந்தனர். இப்போதோ ஆளும் கட்சிக்கு வேண்டியவர்களை ஆசிரியர் குழுக்களாக அமைத்து அவர்கள் தேர்ந்தெடுக்கும் பகுதிகளை-சிலசமயம் அரசியல் வாடை வீசுவனவாக உள்ளவற்றையும் தொகுத்துப் பாடநூல்களாகத் தருகின்றன. சில சமயம் பாடத்திட்டத்தினையும் பிறவற்றையும் சரியாகப் புரிந்து கொள்ளாது ஏதோ தொகுத்தோம் என்று பாடநூல்களைத் தொகுத்துவிடுகின்றனர். புதிய பாடத்திட்டம் (10+2) வந்தபோது ஒரு பாடத்திற்கு இவ்வாறு தவறாக அச்சிடப்பெற்ற சுமார் 40000 நூல்கள் (நாற்பதாயிரம்) தள்ளப்பெற்று வேறு புதிய வகையில் வெளியிடப்பட்டதெனக் கேள்விப்பட்டேன்.