பக்கம்:கல்வி எனும் கண்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

கல்வி எனும் கண்


மக்கள் நினைக்கும் அளவுக்குத் தனியார் மானியம் பெறும் பள்ளிகளும் அரசாங்கப் பள்ளிகளும் செயல்படுகின்றன. ஒரு வகுப்பிற்கு 40 அல்லது 45 என்பதுபோக 75 அல்லது 80 வரை மாணவரை அடைத்துவைக்கும் அவல நிலையினைச் சில பள்ளிகளில் காண்கிறோம். சூன் மாதம் தொடங்கிய பள்ளிக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தேவையான ஆசிரியரை அனுப்புகின்ற அரசாங்க விதிமுறைகளும் உள்ளன. ஆசிரியர்களும், முன்னைவிடப் பல மடங்கு-எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு-சம்பளம் வாங்குகிறார்கள். என்றாலும் பிள்ளைகள் கல்வியில் போதிய கருத்தினைச் செலுத்தவில்லை எனப் பெற்றோர்களும், தலைவர்களும், ஆளுநர், அமைச்சர் போன்றார்களும் சொல்லுகின்றனர். எனவே ஏழைகளுக்கு எனத் தனிச் சலுகை அளித்துச் சம்பளம் இல்லையாக்கி, இன்றைய நிலைக்குத் தேவையான சம்பளத்தை ஓராம் வகுப்பு முதல் வரையறுத்து வசூல் செய்தால் பணம் கட்டும் பெற்றோர்க்கும் அக்கறை உண்டாகும். அரசின் கண்காணிப்பும் அதிகமாக்கப்பெறல் வேண்டும். தொடக்கக் கல்வியும் அடுத்த உயர்நிலைக் கல்வியும் தரம் உயர்ந்து தக்க வகையில் மாணவருக்கு அளிக்கப்பெற்றால்தான் பின் கல்லூரிக் கல்வியில் தெளிவும் தரமும் காணமுடியும். எனவே அதிகக் கண்காணிப்பும் கண்டிப்பும் ஆரம்ப உயர்நிலைப் பள்ளிகளுக்குத் தேவையானவை. இலவசக் கல்வியுடன் அரசியலும் இணைக்கப் பெற்றிருப்பதால் என் கருத்தினை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது தெரியும். எனினும் உள்ள நிலையினைத் தெள்ளத்தெளியக் காட்டவே இதைக் குறித்தேன்.

இப்படியே இலவச பஸ் பாஸ் வழங்கலும். இது வேண்டுமென்று யாரும் கேட்கவில்லை. பெரும்பாலும் பள்ளிப் பிள்ளைகள் தத்தம் வாழிடங்களுக்கு அருகில் உள்ள பள்ளிகளிலேயே இடம் பெறுகின்றனர். சம்பளம் வாங்கும் பள்ளிகளில் பெரும்பாலன உந்துவண்டிகள் கொண்டுள்ளன. எனவே இந்த நிலை தேவையற்றது. இதனால் தேவை