பக்கம்:கல்வி எனும் கண்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
1. கல்வி எனும் கண்

உலகம் சுழன்று வரும் வேகத்தில் மக்கள் உணர்வு ஊசலாடுகின்றது. கி.பி. 2000இல் இதைச் செய்வோம், அதைச் செய்வோம்—நாட்டை பொன்னாடாக்குவோம்—விண்முட்டப் புகழ் பரப்புவோம் என்று மேலை நாடுகள் மட்டுமின்றி. பரந்த பாரதமும் அதன் அங்கமாக உள்ள தமிழகமும் நாள்தோறும் முழங்குகின்றன. ஆனால் செயல் முறையில் அத்தகைய, நாட்டமும் ஊக்கமும் உணர்வும் வேகமும் காட்டவில்லை:

"கூட்டத்தில் கூடிநின்று கூடிப்பிதற்றல் இன்றி
நாட்டத்தில் கொள்ளாரடி-கிளியே
நாளில் மறப்பாரடி"

என்று பாரதியார் இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் கூறிய கூற்று. இன்றும் மெய்ம்மையாக அன்றோ உள்ளது. ‘சொல்வது ஒன்று செய்வது ஒன்று’ என்பது இன்றைய வழக்கமாகிவிட்டது. அரசியலைச் சூதாட்டம் என்பர். ஆனால் அறிவியல், ஆன்மவியல், சமூகவியல், பண்பாட்டியல் யாவுமே சூதாட்டமாகவன்றோ இன்று வடிவெடுத்து உலவுகின்றது. பாரதி பாடி ஒரு நூற்றாண்டு-அவன் மறைந்து முக்கால் நூற்றாண்டு, உரிமை பெற்று அரை நூற்றாண்டு இப்படி நூற்றாண்டு எல்லை கழிந்தும் இந்திய மக்கள்—தமிழ் மக்கள் எந்தவகையில் முன்னேறி உள்ளனர் என்று சொல்ல முடியும்? எண்ணிப் பாருங்கள்!

‘வஞ்சமின்றி வாழுமின்’ என்று பெரியவர்கள் வலியுறுத்திய நாட்டில்-வள்ளுவர் பிறந்த நாட்டில் வாழ்க்கை நெறி எப்படி வரம்பின்றி வீழ்ந்து, நாட்டையும் உலகையும் நலிவுறுத்துகின்றது. இன்று பலர் பேசுவது

க.-1