பக்கம்:கல்வி எனும் கண்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

கல்வி எனும் கண்


அவ்வாறே போற்றப்பட்டன. கல்வித்துறை நெறியில் மாவட்டக் கல்வி அலுவலர், வட்ட ஆய்வாளர்களின் நேர்முகப் பார்வையோடு, அம்மாவட்டக் கழக உறுப்பினர் அடிக்கடி பள்ளிகளைப் பார்வையிட்டு வந்தமையின் பள்ளிகள் முறையாக நடைபெற்றன எனலாம். கல்லூரி தவிர்த்து மற்றைய எல்லாப் பள்ளிகளும் இவர்கள் மேற்பார்வையிலேயே இருந்தன.

இன்றோ இந்த நிலை இல்லை. பஞ்சாயத்து ஒன்றியங்கள் என்று பெயரளவில் இருப்பினும் அதன் எல்லை விரிந்துள்ளமையின் தனி உறுப்பினர் நேர்முகப் பார்வை அருகிவிட்டது. முன் இருந்தமை போன்று ஒன்றியத்துக்கென, கல்வியைக் கவனித்துப் போற்ற, தனிக் கல்வி அலுவலகமும் கிடையாது. அரசியல் சூழலால் அடிக்கடி இந்த ஒன்றியங்களும் கலைக்கப் பெறுகின்றன. எனவே ஊர்தோறும் கல்வியில் முன்னேற்றம் காண முடியவில்லை எங்கிருந்தோ ஆய்வாளர்-முன் அறிவிப்புடன் வரும்போது எப்படியோ வகுப்புகளைச் சரிகட்டிக் காட்டிவிட்டுப் பல நாள் மூடிக் கிடக்கும் பள்ளிகள் பல உள. தனியாசிரியர் பள்ளிகளைப் பற்றியோ சொல்ல வேண்டியதில்லை. தக்க நல்லாசிரியர்களும் தற்காலத்தில் கிடைப்பதரிது. எனவே கிராமப் பள்ளிகளில் நல்ல முறையில் கல்வி அமைய வேண்டுமாயின் நெருங்கிய தொடர்புடைய நல்லவர் குழுக்கள் தேவை. இங்குள்ள பிற நிலைகளைப்பற்றிப் பின்பு தனியாகக் காணலாம்.

வயது வந்தோருக்கு எனக் கல்வி கற்பிக்கும் முறை நாட்டில் போற்றப்பெறுகின்றது. அதற்கெனக் கோடிக் கணக்கில் மத்திய அரசும் மாநில அரசும் போட்டியிட்டுக் கொண்டு செலவு செய்கின்றன. பல தனியார் நிறுவனங்களும்கூட ஓரளவு உதவுகின்றன. பள்ளி, கல்லூரி மாணவர்கள் இதில் ஈடுபடுத்தப்படுகின்றனர். எனினும் செலவுக்கு ஏற்ற பயன் விளைவதில்லை. ஏட்டுக் கணக்கினை