பக்கம்:கல்வி எனும் கண்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
8

இன்றைய மத்திய அரசும் மாநில அரசுகளும் இந்த நெறி வழியைப் பின்பற்ற வேண்டும். பாடங்கள் செம்மையாக்கப் பெறவேண்டும். ஆசிரியர் பட்டத்துக்கு ‘நல்லாசிரியர்’களாக அன்றி உண்மையிலேயே நல்லாசிரியர்களாகத் தம்மிடம் பயில்வாரை வாழ வைக்கவேண்டும். பெற்றோர்களும் பிறவற்றைக் காட்டிலும் தம் மக்கள் கண்ணாகிய கல்வியில் நலம் பெறுவழியே உதவி செய்யவேண்டும். மாணவர்களும் இன்றைய சுற்றுப்புறச் சூழலில் சிக்காமல் கற்பன கற்று, அதன் வழி நின்று நாட்டை வளமாக்க முயலவேண்டும். இந்தப் பேராசையின் காரணமாகவே நான் இந்த நூலை எழுதினேன்.

இந்த நூல் நாட்டுக்கல்வி ஒன்றினையே நாட்டமாகக் கொண்டு எழுதப் பெற்றமையின் அதில் தற்போது உள்ள குறைகளை அங்கங்கே மென்மையாகவும் வன்மையாகவும் சுட்டிக் காட்டினேன். இதனால் நான் யாரையும் குறை கூறினேன் என்றோ, குறைத்து மதிப்பிட்டேன் என்றோ யாரும் எண்ணவேண்டாமெனக் கேட்டுக்கொள்ளுகிறேன்.

எப்படியாயினும் நம்முடைய பரந்த பாரதமும் சிறந்த தமிழகமும் பண்டைப் பெருமைகளைத் திரும்பப் பெற்று, உலக நாடுகளுக்கிடையில் உயர்ந்த ஒன்றாக-பிற நாடுகளுக்கு வழிகாட்டியாக ஆன்மீக நெறி, சமுதாயநெறி. முறைபிறழா அரசநெறி, கல்விநெறி ஆகிய அனைத்தும் மிக உயர்ந்த இடத்தினைப் பெற்றுச் சிறக்கவேண்டும் என்ற ஆசை -குறிக்கோள் அடிப்படையிலேயே இச்சிறுநூலை வெளியிடுகின்றேன். நாட்டிலுள்ள நல்லவர் - வல்லவர்-ஆட்சியாளர்கள்-அறிஞர்கள் நல்லவற்றை ஏற்று நாட்டை வளஞ்செய்து கல்வியினை நேரிய வழியில் ஒம்பி அதன் வழி நாட்டு நலனைக் காத்து, நாடு உயர்ந்து ஓங்க வழிகாண வேண்டும் என வேண்டி வணங்கி அமைகின்றேன்.

தமிழ்க்கலை இல்லம்
சென்னை-30 1.12.91

பணிவுள்ள,
அ.மு. பரமசிவானந்தம்


அச்சிடும்போது பிழைகளை ஒத்து நோக்கித் திருத்தி உதவிய பேராசிரியர் திரு. சா. வளவன் அவர்களுக்கு என் நன்றி உரித்து. .

அ.மு.ப