பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இவற்றில் சில, வரலாறாக இருக்கலாம். சில, வழி வழியாக வரும் கர்ண பரம்பரைச் சொலவடையாக மட்டும் இருக்கலாம். சில, புலவர்களின் வாழ்க்கை அநுபவங்களாகவும் இருக்கலாம்.

எப்படி இருப்பினும் இந்த அனுபவங்கள் தமிழ் இலக்கியத்துக்குச் சொந்தம். இவை தமிழ் இலக்கியத்தின் அனுபவங்கள் அல்லது இலக்கியப் படைப்பாளிகளின் அனுபவங்கள். இந்த அனுபவங்களின் சொந்தக்காரர்கள் தமிழர்கள்; இரசித்து மகிழும் முதல் உரிமையைப் பெற்றவர்களும் தமிழர்கள்.

என்ன காரணத்தாலோ சங்க இலக்கியப் பாடல்களும் புராணங்களும் காப்பியங்களும் பிரபலமாக இருக்கிற அளவு தனிப்பாடல்கள் பிரபலமாகவில்லை. மற்றவற்றைக் காட்டிலும் பாமர மக்களைச் சென்றடையும் எளிமையும் இனிமையும் இவற்றுக்கே உண்டு.

நகைச் சுவைக்குத் தமிழ் இலக்கியத்தின் எந்தப் பகுதியிலாவது அதிக இடம் உண்டு என்றால் அது தனிப்பாடற் பகுதிதான்.

தனிப்பாடல்களின் இனிப்பைத் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தினாலே ஒரு சுவைக் களஞ்சியத்தின் பிரதான வாயிலைத் திறந்துவிட்ட மாதிரி ஆகும்.

இந்த நூல் அப்படி ஒரு முயற்சியே. ‘இனிப்பான தனிப்பாடல்’ என்ற பெயரிலும்; ‘கதம்பக் கவிமலர்கள்’ என்ற பெயரிலும் சுதேசமித்திரன் ஞாயிறு மலரிலும், கல்கி வார இதழிலும் முன்பு நான் எழுதியவையும், பிறவும் அப்போது தொகுக்கப்பெற்று இந்நூலாக இங்கு உருப் பெறுகின்றன.

இனி இக்கதைகள் தமிழிலக்கிய இரசனைக்கு உரியவை. தமிழ்ப் புத்தகாலயத்தார். இதனை இப்போது நூலுருவில் கொண்டுவருகிறார்கள்.

இதற்கு மேல் இந்த நூலுக்கும் வாசகர்களுக்கும் நடுவே நின்று தடுக்க ஒரு முன்னுரைக்கு இங்கே உரிமை இல்லை என்று எண்ணுகிறேன்.

நன்றி, வணக்கம்
நா. பார்த்தசாரதி
தீபம்
சென்னை,
12-10-1977