பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

தமிழ் இலக்கியக் கதைகள்


“இங்கும் அந்தத் துன்பம்தானா?” எனக் கூறிக் கொண்டே கவிராயர் பாட்டைத் தொடர்ந்தார்.

கொஞ்சமல்ல பிரம்படியின் புண்ணும் வேடன்
கொடுங்காலால் உதைத்த புண்ணும் கோபமாகப்
பஞ்சவரில் அன்றொருவன் வில்லாலடித்த புண்ணும்
பாரென்றே காட்டி நின்றான் பரமன்றானோ!”

பாட்டு முடிந்தது. பெண்ணொரு பாகனாரிடம் தன் துன்பத்தை முறையிட வந்தார் இராமச்சந்திர கவி. அவரோ தம் துன்பத்தைக் கவிராயரிடம் காட்டாமல் காட்டி முறையிட்டு விட்டார்.

4. துயரின்மேல் துயர்

துயரம் வருவதும் அதைப் பொறுத்துக்கொள்வதும் சகஜம்தான். ஆனால் அடுக்கடுக்காக ஒன்றை ஒன்று விஞ்சும் நிலையில் வரும்போது இன்னது என்று புரியாத குழப்ப நிலைக்கு ஆளாகின்றான் மனிதன். குழப்ப நிலையில் ஒரேயடியாக மனங் குமைந்து கல்லாய்ச் சமைந்துவிடுவர் சிலர். அழுவதா சிரிப்பதா என்று பேதலிப்பு அடைந்து விடுவர் மற்றுஞ் சிலர். இந்த விபரீத நிலையை வேடிக்கையாகக் கூறும் சுவைமிக்க தனிப் பாடல் ஒன்று உண்டு. துயரின் மேல் துயராக அடுக்கி, அவ்வடுக்குச் சூழலின் நடுவே ஒரு தனி மனிதனை நிறுத்திக் காட்டும் முறையில் அமைந்த இரசனை அனுபவித்து மகிழத்தக்கதாக இருக்கிறது. இதனைப் பாடியவரும் இராமச்சந்திர கவிராயரே.

நல்ல அடைமழைக் காலம். மழை! மழை! இடைவிடாமல் கொட்டு கொட்டென்று கொட்டிக் கொண்டிருக்கிறது. அது ஒரு மண்குடிசை. நான்கு புறச் சுவரும் மண்ணால் எடுக்கப் பெற்றவை. மேலே பனை ஓலை வேய்ந்த கூரை. குடிசையின் ஒருபுறம் மாட்டுக் கொட்டமாக மறித்து விடப்பட்டிருந்தது. கொட்டத்திலே சினைமாடு கட்டப்பட்டிருந்தது. சிறிது நேரஞ் சென்ற அளவில்