பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

தமிழ் இலக்கியக் கதைகள்

'இராமன்’ என்ற இயற்பெயரையுடைய வள்ளல் ஒருவனிடம் சென்று இசைப்பாடல்களைப் பாடிய அந்தப் பாணனுக்கு இந்த வள்ளல் தக்க பரிசும் கொடுக்கவில்லை. வெறுங்கையுடன் வீடு திரும்பிய பாணனைக் கண்ட பாடினி ‘என்ன பரிசில் பெற்று வந்தீர்கள்?’ என்று கேட்கிறாள். ஏமாற்ற உணர்வை மறைக்க, வேடிக்கையாக இரு பொருள்படும் பரிசுக் குரிய பெயர்களைக் கூறுகிறான் பாணன்.அவ்வாறு அவன் கூறும் பரிசுப் பெயர்களுக்கு அவள் வேறொரு பொருள் கண்டு குதர்க்கமாக அவனை இடைமறித்துப் பேசுகின்றாள். இதுதான் பாடலிற் கொடுத்துள்ள கருத்தின் மொத்தமான சுருக்கம்.

பாடினி: என்ன, ஆகாயத்திற்கும் பூமிக்குமாக இராமனுடைய புகழை ஒரேயடியாக அளந்து பாடியதற்குப் பரிசில்களாக எவை எவை பெற்று வந்தீர்கள்?

பாடினியினது இந்த வினா பாணனைத் திடுக்கிடச் செய்தது. தன் ஏமாற்றத்தை அவனறியாமல் ‘ஒரு பெரிய யானையைப் பரிசிலாகக் கொடுத்தான். வாங்கி வந்தேன்’ என்பதை நயமாக யானைக்கு உரிய ஒவ்வொரு சொற்களாலும் கூறக் கருதினான் அவன். சொல்லப் போவதென்னவோ பொய்தான்! அதை வேடிக்கையாகச் சொல்வதிலும் பரிசில் கிடைப்பது போன்ற இன்பம் இருக்கிறதல்லவா? அந்த இன்பத்திற்காகத்தான் பாணன் அவளை இப்படி வம்புக்கு இழுத்தான். அவள் மட்டும் லேசுப்பட்டவளா என்ன?

பாணன்: ஏன்? களபத்தைப் பரிசிலாகப் பெற்று வந்தேன்!

(களபமென்பதற்கு யானை என்றும் கலவைச் சந்தனம் என்றும் இரு பொருள்கள்)

பாடினி (ஒரு குறுநகையுடன் உதட்டைக் கடித்துக் கொண்டே) அப்படியா? நன்றாக உடம்பு குளிரப் பூசிக் கொள்ளுங்கள்! சரிதானே? -

பாணன் : (சற்றே சினங் கொண்டவன் போன்ற முக பாவத்துடன்) அதென்ன? அவ்வளவு சுலபமாகச் சொல்லி