பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

தமிழ் இலக்கியக் கதைகள்

இலையைத் தூர எறிந்துவிட்டு வீரராகவ முதலியாரிடம் திரும்பி வந்தார் நண்பர்.

“இலை கிடைத்ததா இல்லையா? இங்கே சிறிது நேரத்திற்கு முன் ஏதோ ஒரு நாய் வந்து குரைத்துக்கொண்டே இருந்தது...” புலவர் ஒன்றும் தெரியாதவர்போலப் பேசினார். குருடராகிய அவருக்குத் தெரிந்திருக்கவில்லை என்றால் அது நியாயந்தானே? நண்பர் எல்லாவற்றையும் சொன்னார். வேறு வழியின்றிப் பசியோடு பயணத்தைத் தொடர்ந்தனர். வயிற்றில்தானே பசி? கற்பனைக்கும் உள்ளத்துக்கும் பசி இருக்க வேண்டியதில்லை! இந்த நிகழ்ச்சி புலவரால் பாட்டாகியது.

சீராடையற்ற பைரவன்
வாகனம் சேரவந்து
பாராரும் நான்முகன் வாகனத்
தன்னை முன்பற்றிகக்கவ்வி
நாராயணன் உயர்வாகனம்
ஆயிற்று நம்மைமுகம்
பாரான் மைவாகனன்
வந்தேவயிற்றிற் பற்றினனே”

பைரவன் வாகனம் = நாய், நான் முகன் வாகனம் = அன்னம் (கட்டுச்சோறு), நாராயணன் உயர் வாகனமாயிற்று = கருடனைப் போல வேகமாகப் பறந்து ஓடிப் போயிற்று. மைவாகனன் = அக்னி, வயிற்றில்பற்றல் = பசி எடுத்தல், முகம்பாரான் தாட்சண்யமில்லாமல்.

பாட்டின், பொருளைச் சங்கேதமாக மறைத்துச் சொல்வதிலும் ஓர் அழகே காண்கிறோம்.