பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

17

உடனே திரிசிரபுரம் திரும்புவதாகவும் சொல்லி அனுப்பினீர்களே, அதன் பொருள் என்ன அம்மா?”

“பாதுஷாவின் செருப்பையும், அதைவிட அடிமைகளான ஏவலாட்களையும் மதுரையிலேயே நாம் ஏன் காத்திருந்து எதிர்கொண்டு சந்திக்கவில்லை என்பதற்கு ஏதாவது ஒரு காரணத்தைச் சாக்குப்போக்காகச் சொல்ல வேண்டுமே அதனால் தான்...”

“மதுரையிலேயே அவர்களை எதிர்கொண்டு 'மாட்டேன்' என்று நேருக்கு நேர் மறுத்துவிட்டிருக்கலாமே அம்மா?”

“அது ராஜதந்திரமில்லை மகனே! போருக்கும் விரோதத்துக்கும் முன்னால் முதலில் நாம் நமது எதிரியைப் போதுமான அளவு குழப்பவும் இழுத்தடிக்கவும் வேண்டும். நாம் என்ன செய்யப்போகிறோம் என்பது நம் எதிரிக்கு முன்கூட்டியே தெரிந்துவிடக்கூடாது. நமது எதிரி அதிகபட்சமான தவறுகளையும் குழப்பங்களையும் புரிந்து தடுமாறுகிற எல்லைவரை நாமே அவனைத் துணிந்து அனுமதிக்கவேண்டும். யாரைத் தேடி வந்திருக்கிறார்களோ அவனுக்கே உடல் நலமில்லை என்றால் அவர்களது வேகம் தானே மட்டுப்படும்? எதிரியின் அந்த வேகக் குறைவு நாம் வேகம் பெறப் பயன்படும்.”

தாயின் மறுமொழியில் இருந்த சாமர்த்தியமும், சாதுர்யமும் ரங்ககிருஷ்ணனை வியப்பிலாழ்த்தின.

கிழக்கு வெளுத்துப் பின் மெல்ல மெல்லச் சிவக்கத் தொடங்கியது. அடிவான வெளுப்பில் அப்படியே ஒரு சித்திரத்தை எழுதிப் பதித்தது போல் மலைக்கோட்டையும் திரிசிரபுர நகரமும் தெரியத் தொடங்கின. புள்ளினங்களின் குரல்களும் அதிகாலையின் குளிர்ந்த காற்றும் பல்லக்கில் அமர்ந்திருந்தவர்களின் தளர்ச்சியைப் போக்கின. காவிரிக்கரை பிரதேசம் நெருங்க நெருங்கப் பல்லக்குத் தூக்கிகளின் உற்சாகம் அதிகமாகியது. பல்லக்குக்கு முன்னும் பின்னும் தீப்பந்தங்களோடு வெளிச்சத்துக்காக ஓடிக்கொண்டிருந்தவர்கள் தீவட்டிகளை அணைத்தார்கள். பல்லக்குத் தூக்கிகள் களைப்புத் தெரியாமலிருப்பதற்காகவும் உறங்கி விடாமல் இருப்பதற்

ரா-2