பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

35

யிருப்பதையும் அவன் கண்டு கொண்டான். கையாலாகாத்தனமும் ஆத்திரமும் அவன் உள்ளத்தை வெதுப்பின. அந்த ஆத்திரக்கு முறலில், முத்து வீரப்பனின் கோட்டைப் படை வீரர்களுடன் பாதுஷாவின் ஆட்கள் போர் செய்ய முயன்று தோற்றுப் போனார்கள். சிலர் அதில் உயிரிழக்கவும் நேரிட்டது.

'கணவனை இழந்து கைம்பெண்ணான ஒரு ராணி உங்களை அவமானப்படுத்தி விட்டாள்' என்பதாகப் பாதுஷாவிடம் போய் அவருக்குச் சினமூட்டுகிற விதத்தில் சொல்லலாம் என்றால் மங்கம்மாள் தான் இதில் சம்பந்தப்படாமல் எல்லாவற்றையுமே சாதுரியமாகச் செய்திருந்தாள். அவளுடைய அந்தச் சாதுரியத்தை நினைக்கும் போது அவன் குமுறல் இரண்டு மடங்காயிற்று. நேரடியாக அவமானப்பட்டது முத்து வீரப்பனிடம் என்றாலும் தங்களை அவமானப்படுத்திய மதிநுட்பம் ஒரு பெண் பிள்ளையினுடையது என்ற உறுத்தல் உள்ளே இருந்தது அவனுக்கு.

டில்லி பாதுஷாவின் ஆட்கள் திரும்பிப்போன பின்புதான் கைப்பிடித்த மனைவி சின்ன முத்தம்மாளுடன் இரண்டு வார்த்தை சிரித்துப் பேசவும், சரசமாடவும் நேரம் கிடைத்தது முத்து வீரப்பனுக்கு. அடுத்து சில நாள்கள் மண வாழ்வின் இனிய மயக்கத்தில் கழிந்தன. காவிரியில் புது வெள்ளம் வந்தது. அவர்கள் மனத்தைப் போலவே காவிரியும் நிரம்பி வழிந்தது. கோடையின் சுகத்தைக் காவிரிக்கரையின் இதமான மாந்தோப்புகளில் செலவிட்டார்கள் அந்த இளம் காதலர்கள். ஆடிப்பாடி மகிழவும் படகு செலுத்திக் களிக்கவும் நேரம் போதாமலிருந்தது அவர்களுக்கு.

ஒரு மண்டலத்திற்குப்[1] பின் விடிந்த ஒரு வைகறையில் ராணி மங்கம்மாளும் இராயசம் அச்சையாவும்[2] அவசரம் அவசரமாக முத்து வீரப்பனை அழைத்து வரச் சொல்லி அந்தப்புரத்திற்கு ஆளனுப்பினார்கள். விடியலின் கனவும் நனவும் கலந்த இனிய உறக்கத்திலிருந்து அவன் எழுந்திருந்து விரைவாக அவர்கள் இருவரையும் அரண்மனை மந்திராலோசனை மண்டபத்தில் வந்து


  1. 40 நாள்
  2. அரண்மனைக் காரியஸ்தர்