பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

தமிழ் இலக்கியக் கதைகள்

இருக்கின்றதே? குட்டிச் சுவருக்குக்கூட உணர்ச்சியும் சுவையும் தட்டுப்பட்டுவிடலாம்! இந்தக் கஞ்சப் பிரபுக்களுக்கு எங்கே? பொன்னும் முத்தும் பட்டுப் பீதாம்பரமுமாகத் தங்கள் பருத்த உடலை மறைக்க அழகு செய்துகொண்டு வெளிக்குப் பெரிய மனிதர்களாக நடிக்கிறார்கள். ஒரு வேளை நடப்பது இப்படியும் இருக்குமோ? கவிராயரின் குயுக்தி வேலை செய்கிறது. பண்பாடுகளிடம் மழைக்குக்கூட ஒதுங்கி இருக்காத இவர்களை, இவர்களிடம் இல்லாத பண்பாடுகளையெல் லாம் இருப்பதாகப் பாடிவைத்ததால்தான் நமக்கும் இல்லை என்று சொல்லி விட்டார்களோ? ஆமாம்? அதுதான் காரணமாயிருக்க வேண்டும்! பொய் சொன்ன வாய்க்குத் தகுந்த தண்டனை வேண்டுமல்லவா? கவிராயர் தமக்குள் சிரித்துக் கொள்கிறார், அது கேலிச் சிரிப்பு!

“அசல் மடையனைப்பெரிய அறிவாளிபோல இருக்கும்படி கருத்தமையப் பாடினேன். வெறும் காட்டுப் பயலை நாகரிகந் தெரிந்த நாட்டுக்குத் தலைமை சான்றவன் என்றேன். கொலை, கொள்ளை, வஞ்சகம் இவைகளை எல்லாவற்றையும் ஒன்று விடாமல் செய்துவிட்டுக் ‘கெளரவப்’ போர்வைக்குள் மறைந்து கொள்ளும் அந்தப் பிரபுவை மிக நல்லவன் என்ற பொருள் தோன்றப் பாட்டில் கூறினேன். போர் முகத்தைச் சித்திரத்திலே கூட பார்த்திருக்காத (ஒரு வேளை பார்த்திருந்தாலும் மூர்ச்சித்து விழுகின்ற) ஒரு கோழையைப் போரிலே புலி எனப் புனைந்துரைத்தேன். கையும் காலும் உடம்புமாக மொத்தத்தில் ஒரு தோலால் மூடப்பட்ட எலும்புக் கூடு போன்ற நோஞ்சல் மனிதனை ‘மல்விளையாடிய பெரிய புயத்தையுடையவனே!” என்று முழுப் பொய்யாகப் புகழ்ந்தேன். கனவில்கூட எச்சிற் கையை உதறியறியாத கஞ்சனை, வள்ளல் என்றேன். இவ்வளவும் கவிதைக்காக நான் மிகுதியாகப் புனைந்துரைத்த பொய்யுரைகள். இப்படி இல்லாதவற்றை எல்லாம் சொன்னதற்காகத்தான் அவர்களெல்லாரும் கூடிப் பேசிக் கொண்டவர்களைப் போல் எனக்கும் இல்லையென்று கையை விரித்து விட்டார்கள். கவிராயர் இப்போது வாய்விட்டுச் சிரித்தார்.