பக்கம்:கபாடபுரம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

கபாடபுரம்


இருந்தன. இந்தத் தென்பழந்தீவுக் கடற் கொலைஞர்களின் இனத்தில் பெண்கள் குறைவாகவும், ஆண்கள் அதிகமாகவும் இருந்ததனால் - கப்பல்களைக் கொள்ளையடிக்கும் காலங்களிலும், தரைப்பகுதி நகரங்களில் புகுந்து கொள்ளையிடும் காலங்களிலும் பொன்னையும், மணியையும், இரத்தினங்களையும், முத்துக்களையும் கொள்ளையிடுவதைவிட அழகிய பெண்களைக் கொள்ளையிடுவதில்தான் இவர்கள் வெறிபிடித்து அலைந்தனர்.

இரத்தம் உமிழ்வதுபோல் உருண்டு அலைபாயும் சிவந்த விழிகளும் உயரமும் பருமனமாகத் தோற்றமும், உடலில் அருகம்புல் போல் விகாரமாகச் செழித்த ரோம அடர்த்தியும், செந்திப்போல் சடையிட்டுத் திரிந்த தலைமுடியுமாகக் கொலையரக்கர்களெனத் தோன்றுவார்கள் குறும்பர்கள். ஊன் தின்பதிலும், மதுவருந்துவதிலும் அளவற்ற ஆவலும் பசியுமுள்ள இந்தக் கொலைவெறியர்களுக்கும் கபாடபுரத்துக்கும் பழம் பகைகள் நிரம்ப இருந்தன. அரச நீதியையும் ஒழுங்கையும் நிலை நாட்டுவதற்காகப் பாண்டிய மரபினர் இவர்களைப் பண்படுத்த முயன்ற முயற்சிகளை எல்லாம் தங்களுடைய சுதந்தர உணர்வையும், கொள்ளையிட்டுத் திரியும் தொழிலையும், கட்டுப்படுத்தி ஒடுக்கும் ஏற்பாடுகளாகவே இவர்கள் புரிந்து கொண்டதுதான் இதற்குக் காரணம்.

தென் பழந்தீவுகளில் அங்கங்கே சிறு சிறு குழுக்களாகத் திரிந்துவந்த இவர்கள் தொகை எண்ணிக்கையிற் சிறிது என்றாலும் இவர்களிடம் வலிமையும், சூழ்ச்சியும், கொடுமையும் மிகுதியாயிருந்தன. பாண்டிநாட்டின் வலிமை மிகுந்த கடற்படை மரக்கலங்களையும், வில் வீரர்களையும் பெருந் தொகையினராக அனுப்பி இந்தத் தென் பழந்தீவுக் கடற் கொலைஞர்களின் இனத்தைப் பூண்டோடு அழித்துவிடுவது சாத்திய மென்று தோன்றினாலும் அப்படிச் செய்து தீர்த்துவிடுவது இராசதந்திரமாகாது என்று விட்டிருந்தார் வெண்தேர்ச் செழியர். கடல் வழியாக வேறு நாட்டினர் எவரேனும் கபாடபுரத்தின் மேலோ பாண்டிய நாட்டின் வேறு கடலோரப் பகுதிகளின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/50&oldid=489949" இலிருந்து மீள்விக்கப்பட்டது