பக்கம்:கல்வி எனும் கண்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆரம்பக் கல்வி

89



தெற்கே ஒருமாநிலம் ஆங்கிலத்தினைத் தாய்மொழியாகக் கொண்டுள்ளது எனக் கேலி செய்ய மாட்டாரா! பாரதிக்கு நூற்றாண்டு விழா கொண்டாடினோம். ஆனால் அவன் சொல்லை ஏற்காது, இளங்குழந்தைகளை-மழலைகளை மாற்று மொழி வழியே வாழ வழிவகுக்கலாமா!

கடந்த இருபது ஆண்டுகளில் இந்நிலை மிகவும் கேவலமாகி வந்துகொண்டிருக்கிறது. ஆனால் இதிலும் பிள்ளைகள் திறம் பெற்றார்களா என்றால் இல்லை. பழைய காலத்தில் வெள்ளையர் வீட்டில் வேலை செய்பவர்-பட்லர் இங்கிலிஷ் பேசுவார் என்பர் அதுபோல வெறும் பேச்சிலே மட்டும்தான் அந்த ஆங்கிலமொழி. ஆழ்ந்த அறிவிலோ எழுத்திலோ-படிப்பிலோ அந்தப் படிப்பின் நிலை இல்லை. ஒரு கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றும் ஒருவரிடம் கார்லைல் (Carlyle) என்பாரைப் பற்றித் தெரியுமா என்று கேட்டேன். அவர்கள் தெரியாது என்று தலை ஆட்டினர். சரி கிரே (Gray) என்பாரைப் பற்றித் தெரியுமா என்றேன், பதில் இல்லை. ஷேக்ஸ்பியர், மில்டன், கோல்டுஸ்மித் போன்ற பழம்பெரும் ஆசிரியர்களைப் பற்றியோ H. G. வெல்ஸ் அல்லது பர்னாட்ஷா என்னும் அண்மையில் வாழ்ந்து வாழ்விலக்கியம் பாடியவரைப் பற்றியோ அறியா நிலைதான் காண்கிறது. அவர்கள் எழுதும் எழுத்திலோ ஒரு வரிக்கு இருபிழைகள் காணலாம். இப்படித் தான் பலர் உள்ளனர். சிலர் உண்மையிலே வல்லவராக இருக்கலாம். ஆனால் பெரும்பாலார் கற்றும் கல்வாதார். அவர்களிடம்தானே மாணவர்கள் பயில்கின்றார்கள். பெரும்பாலும் அத்தகையவர்தாமே இங்கே ஆசிரியர் பதவிக்கு வருகிறார்கள். சிலர் உழைப்பின் பயனால் சிறிதளவு முன்னேறுகிறார்கள் என்றாலும் பலர் எங்கோ சென்று கொண்டிருக்கின்றனர். எனவே தமிழ்க் கல்வியோ-பிற பாடங்களோ அன்றி ஆங்கிலக் கல்வியும். இத்தன்ை ஆரவாரங்களுக்கிடையில் நன்கு வளரவில்லை.

க.-6