பக்கம்:கல்வி எனும் கண்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

கல்வி எனும் கண்


வேண்டும். கிராமங்களில் பயிரிடுவோர் பாதி நேரத்தை வீணாக்காமல் நாட்டுக்குத் தேவையான பொருள்களை உற்பத்தி செய்துதரும் நிலை வளர வேண்டும். படித்து விட்டு வேலை இல்லாதிருக்கும் நிலையும் இதனால் இல்லையாகும் எல்லாரும் நகரில்தான் உத்தியோகம் பார்க்க வேண்டும் என்ற நிலை இருந்தால் பல கோடியாக வாழும் நம் நாட்டுக் கிராம மக்கள் கதி என்னாவது? தொழில் மயம் கிராமங்களில் தொடங்க வேண்டும்.

தொழிற் கல்லூரிகளைத் தொடங்குவதற்குப் பல்கலைக் கழகம், மாநில அரசு, மத்திய அரசு ஆகிய அனைத்திலிருந்தும் இசைவு பெறுதல் இன்றியமையாதது. வேண்டுவோர்தம் தேவையினை அறிந்துவரும் விண்ணப்பங்களை உடனுக்குடன் கவனித்து, தொடங்குவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே முடிவு எடுத்து மத்திய, மாநில அரசுகளும் பல்கலைக் கழகங்களும் ஆணை அனுப்பினால் நன் மாணவர்கள் சேர்க்கப் பெற்றுப் பயனடைவர். எனவே புதிய தொழிற் கல்லூரிகள் திறக்கவும் புதிய பாடங்கள் தொடங்கவும் வரும் விண்ணப்பங்களை உடனுக்குடன் ஆராய்ந்து இரு அரசுகளும் பல்கலைக் கழகங்களும் செயலாற்ற வேண்டிய கடமையினை மறத்தலாகாது. இசைவு வழங்குவதிலும் நேரில் திறனறி குழுக்கள் அமைத்து நேரில் சென்று கண்டு அமைப்பாளர்கள் தக்க வகையில் தேவையானவற்றைச் செய்திருக்கிறார்களா எனக் கண்டே இசைவு வழங்கவேண்டும். விரைந்து செயல்படின் விடிவு உண்டு விளைவும் உண்டு.

தொழிற் கல்லூரிகளைப் பல தொழிற் கூடங்களோடு இணைக்கும் வகையில் அமைக்க வேண்டும். வெறும் ஏட்டுப் படிப்பும் அங்கே செய்யும் சில கள ஆய்வுகளும் போதா! ‘ஏட்டுக் கல்வி கவைக்கு உதவாது’ என்பது எல்லாக் கல்விக்கும் பொருந்தும் என்றாலும் தொழிற் கல்விக்கு மிக மிகமுக்கியமானது. ‘ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது’ என்ற மற்றொரு பழமொழியும் இதற்குப் பொருந்தும்.