பக்கம்:கல்வி எனும் கண்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது






5. ஆரம்பக் கல்வி


இந்தியா விடுதலை பெற்றபின் ஆய்ந்து எழுதப்பெற்ற அரசியல் சாசனத்தே சாதி, பொருளாதார ஏற்றத் தாழ்வு எதையும் கருதாது எல்லாக் குழந்தைகளுக்கும் பதினான்கு வயது வரையில் கட்டாயக் கல்வி தருதல் வேண்டும் எனவும், இச்செயல், சாசனம் செயலுக்கு வந்த ஆண்டிலிருந்து (1950) பத்து ஆண்டுகளுக்குள் நிறைவேற வேண்டும் எனவும் குறிக்கப்பெற்றுள்ளது (விதிகள் 89, 45, 46, 47). ஆயினும் நாற்பது ஆண்டுகள் கழித்தும் எந்த அளவு இது நிறைவேற்றப் பெற்றுள்ளது என்பதை நாடும் உலகமும் நன்கு அறியும். 1981ஆம் ஆண்டு மக்கள் கணக்குப்படி 6 வயதுக்கு உட்பட்டோர் 14 கோடி (17%) எனவும் அதில் வ்றுமை நிலையில் உள்ளவர் 5.6 கோடி (40 %) எனவும் அறிகிறோம். இதில் பல குழந்தைகள் பள்ளியினைப் பார்த்ததும் கிடையாது. இக்குழந்தைகளுள் பள்ளியில் சேர்பவர்களும் இடையில் 8, 10 வயதுகளில் பள்ளியினை விட்டு வெளியேறுகின்றனர்-நின்று விடுகின்றனர். 1964-66இல் கல்வி வளர்ச்சிக்காக அமைத்த குழு இளங்குழந்தைகள் கல்வியை நன்கு கவனிக்க வேண்டும் எனவும் வற்புறுத்தியது. ஆனால் அதுவும் போற்றப் பெறவில்லை. 1986ஆம் ஆண்டின் கணக்குப்படி 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் (20%) நூற்றுக்கு இருபது பேர் பள்ளிக்குச் செல்லவில்லை. 11.7 கோடி குழந்தைகளுக்கு 1 கி. மீ. நடந்து சென்று படிக்க விரும்பினாலும் அந்த வகையில் பள்ளிகள் இல்லை. பாதிக்கு மேற்பட்ட (50%) பெண்கள் சேர்ந்து இடையில் விட்டு விடுகின்றனர். சென்ற ஆண்டில் எடுத்த கணக்கின்படி கீழே கண்ட வகையில் இளம் பெண்கள் பள்ளியில் சேர்கின்றனர்.