பக்கம்:கல்வி எனும் கண்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மேநிலை வகுப்பு (+2)

63


(ஏழைகளுக்கு உதவுவது தவறு எனக் கூறமாட்டேன்.) ஆனால் அவ்வாறு ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள் பயின்ற பின் பட்டம் பெறுகின்றவர்கள் ‘+2’ படித்த மாணவரோடு போட்டியிட வரலாமா? அவர்கள் வேறு வாணிப முறையிலோ பிற வகைகளிலோ செயலாற்றி வெற்றி பெற வேண்டுமேயன்றி, இதில் போட்டியிட்டுத் தாழ்நிலையிலுள்ள இளஞ்செல்வங்களின் எதிர்காலத்தைத் தடுக்கலாமா? எண்ணிப் பாருங்கள்.

பயில்பவருள் பலர்-கல்லூரியில் உயர் பட்டங்கள் பெறுபவர் வரை-பெரும்பாலோர் அரசாங்க உத்தியோகத்திலேதான் கண்ணாக உள்ளனர். அதற்காக, ஒவ்வொருவரும் தம் சொந்தப் பணத்தைச் செலவு செய்வதோடு, அரசாங்கப் பணத்தையும் வீணாக்குகின்றனர். அறிவியல் மேல்படிப்பிற்கு (M. Sc) ஒருவருக்கு ஓர் ஆண்டுக்கு இருபத்தைந்தாயிரத்துக்கு மேல் செலவாகும் எனக் கணக்கிடுவர். கட்டடம், ஆய்வுக்கள அமைப்பு போன்றவற்றைக் கணக்கிட்டால் இன்னும் அதிகமாகலாம். இவ்வளவு செலவும் ஆன பிறகு சாதாரண எழுத்தர் பதவிக்கு விண்ணப்பம் செய்வது நாட்டுப் பொருளாதாரத்தை நலிவு செய்வதாகாதா! அரசாங்கம் ‘+2’ வகுப்பில் பணிப் பயிற்சி பெறுபவர்தான் அரசாங்க அடிப்படை ஊழியர் ஆகலாம் என்றும், பின் பதவி உயர்வு வேண்டின், அவர்கள் மட்டுமே தனித் தேர்வு எழுதி உயர்வு பெறலாம் என்றும் விதி அமைப்பின் நாட்டுப் பொருளாதாரம் எவ்வளவு சீர்படும்! எத்தனையோ கல்லூரிகள் தேவையற்றனவாகும். பலர் இந்தப் பணிப் பயிற்சியினைப் பெற்று, அரசாங்கப் பதவி கொள்வர். இதற்கெனத் தேவையாயின் அரசியல் சாசனத்தையே (உரிமை பற்றி) திருத்தி அமைத்து வழி காணல் நலம் பயப்பதாகும்.

மேலும் பயின்று ஐ.ஏ.எஸ் போன்ற தேர்வுக்குச் செல்லுகின்றவர்களுக்கு ஏற்ற வகையில் ‘+2’ வகுப்பில் தனி வகைப்