பக்கம்:கல்வி எனும் கண்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொழிற் கல்வி

123


பயிற்சியும் பாதுகாப்பும் தேவை என்பதை மறந்து விடுகிறோம். நான் முன்பு காட்டிய முதியோர் கல்வி நெறியில் இத்தகைய தொழிற்கல்வியும் இடம்பெறின், இதைக் கற்றுக் கொள்ளுவதோடு வருபவர்கள் ஏட்டுக் கல்வியிலும் பயிற்சி பெற வாய்ப்பு உண்டு. பழங்காலத்தில் இருந்தது போன்று பள்ளியிலேயே-சிறப்பாகக் கிராமப்புற பள்ளிகளிலேயே கைத் தொழில்கள் கற்பிக்கப்பெறல் வேண்டும், பெருஞ்செல்வர்களைப் பெரும் கைத்தொழில் பெருக ஊக்கி ‘உள்ளவனுக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவனிடத்திலிருந்து உள்ளதும் எடுத்துக் கொள்ளப்படும்’ என்றபடி, நாட்டு நடப்பும் செயல் முறையும் பிறவும் இருந்தால் எப்படித் தொழில் வளரும்: எப்படி ‘எல்லாரும் எல்லாச் செல்வமும் பெற்று’ வாழ முடியும்? ஆளுபவர் இவற்றையெல்லாம் சிந்தித்து உடன் தக்க வகையில் செயல்பட வேண்டுமெனக் கேட்டுக்கொள்ளுகிறேன். நாடு வாழ அதுவே சிறந்தது. இன்று சிறுதொழில் வளர்ச்சிக்கு ஊக்கமும் ஆக்கமும் தர அரசு முன்வருகிறது. அதற்கென அமைச்சும் தனித்துறையும் கூட உள்ளன என அறிகிறேன். ஆனால் அதற்கு மானியமாகத் தரப்பெறும் அரசாங்கப் பணம் எந்தெந்த வகையிலோ-வழங்குபவருக்குக் கையூட்டு, பிறவகைச் செலவுகள் ஆகியவற்றிற்குப் பயன்படுகிறது என்பர்.

நாட்டில் தொழிற்கல்வி ஓங்கி வருகிறதெனினும் போதிய அளவில் வளர்ச்சி அடையவில்லை. இந்தியக் கல்விக்குழு இதுபற்றித் தன் கருத்தினைத் தெரிவித்து (National Policy of Education) அதன் வளர்ச்சிக்கு வழிகாண முயல்கின்றது. திரு. இராமமூர்த்தி குழுவும் அதன் கருத்துக்களை ஆராய்ந்து வளர்ச்சிக்கு வழிகாட்டியுள்ளது.

தமிழ்நாடு உட்பட நான்கு மாநிலங்களில் உரிமம் பெற்றும் பெறாமலும் பல பொறியியற் கல்லூரிகளும் தொழிற் பள்ளிகளும் இயங்குகின்றன என்றும் அவற்றுள் பல தரத்தில் தாழ்ந்துள்ளன என்றும் அக்குறிப்பு காட்டுகிறது.