பக்கம்:கல்வி எனும் கண்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மழலையர் கல்வி

இளங்குழந்தைகள் கல்வியும் போற்றப்பட வேண்டிய ஒன்று. 5 வயதில் முதல்வகுப்பில் சேர்வதற்கு முன் ஓரிரு வகுப்புகளைத் தற்போது பலர் தெருவுதோறும் நடத்தி வருகின்றனர். ‘L.K.G.’, ‘U.K.G.’ என்ற பெயரில் இளங்குழந்தைகள் வகுப்பினை இரண்டாகப் பகுத்து, படிப்பினைத் தருகின்றனர். 3 வயதுக்கு முன்பும் பணியிடை உழலும் மகளிர் தங்கள் குழந்தைகளைக் காப்பகங்களில் (Creches) விட்டுச் செல்லுகின்றனர். இந்த இளங்குழந்தைகளுக்குப் படிப்புடன், தேவையான ஊட்டச்சத்துடன் கூடிய உணவும் தேவைப்படுகிறது. பள்ளிகளில் சத்துணவுக் கூடங்கள் அமைத்து அரசாங்கம் உதவி புரிவதைப் போன்று. இந்த மழலைகள் பள்ளிகளையும் நன்கு பராமரிக்க வேண்டும். இளம் மழலைகளைப் பாதுகாக்கும் இல்லங்கள் அவ்வளவாகப் பயிற்று நிலையங்களாக அமைவதில்லை. பெரும்பாலும் பணிமேற்செல்லும் தாயர் பிள்ளைகளைப் பாதுகாப்பாக விட்டுச் செல்லும் இடங்களாகவே அவை உள்ளன. குழந்தைகள் அழாமலும் வாடாமலும் பார்த்துக்கொள்வதும் வேண்டும்போது பால், சிற்றுணவு போன்றவை அளிப்பதும் தூங்கும்போது தாயைப்போல பக்கத்தில் இருந்து உறங்க வைப்பதும்தாம் அவை செய்கின்றன. எங்கோ ஓரிரு இடங்களில் பாட்டுகள் கற்றுத் தருவதாகக் கூறுகின்றனர். சிறுசிறு அடிகளில் அமைந்த பாடல்களை மூன்று வயது நிரம்பாத மழலைகள் வாய்மொழியாகக் கேட்க இனிமையாக இருக்குமல்லவா! ஆனால் இன்று அப்பாடல்கள் எல்லாம் ஆங்கிலப் பாடல்களாகவே உள்ள்ன. அப்பிஞ்சு உள்ளங்களில் தாய்மொழி உணர்வும் பற்றும் அற்றுப்போக இந்த முறை வழிசெய்கின்றது. ஒருசில தவிர்த்துப் பெருபாலானவை