பக்கம்:கபாடபுரம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
19. கலஞ்செய் நீர்க்களம்

வலிய எயினன் அப்போதிருந்த சூழ்நிலையில் அவனிடம் விரிவாக உரையாட முடியாமலிருந்தது. யானை, யானையாகத் தோற்றமளித்துக் கொண்டிருந்த பூதாகாரமான மல்லர்கள் இருவரை மற் போரிடச் செய்து கண்டு இரசித்துக் கொண்டிருந்தான் எயினர் தலைவன்.

"இந்தத் தீவில் தனித்து வாழும் எங்களுக்கு உடல் வலிமையைத் தவிர வேறெந்தச் செல்வங்களும் இல்லை. எங்களைச் சுற்றியிருக்கும் கடலுக்கு அப்பாலுள்ள பெரிய பெரிய தேசங்களில் நால்வகைப் படைகளும், வேறு சாதுரியங்களும் உண்டு. எங்களுக்கு அவையொன்றும் கிடையாது" என்று கூறிவிட்டு மற்போரை இரசித்துக் காணுமாறு விருந்தினர்கள் இருவரையும் வேண்டிக்கொண்டான் எயினர் தலைவன்.

அவனுடைய வேண்டுதலாலும் யாவர் கவனமும் மற்போரையே சார்த்திருந்ததாலும் அப்போது அதிகம் பேச்சுக் கொடுத்து எயினர் தலைவனுடைய மனத்தை அவர்களால் ஆழம் பார்க்க முடியவில்லை. எயினர்களிடம் கபடு சூதுவாது இல்லையென்றாலும் அவர்கள் முரடர்களாயிருந்தார்கள். அதனால் அவர்களுடைய மனப்போக்குப்படியே போய் அதன் பின்பே எதையும் தெரிந்துகொள்ளவேண்டியிருந்தது.

"தேச தேசாந்திரங்கள்ையும் கடலிடைத் தீவுகளையும் சுற்றிப் பார்க்கும் எண்ணத்தோடு யாத்திரிகர்களாக வந்திருக்கிறோம்" என்று வந்தவுடனே எயினர் தலைவனிடம் கூறிய கூற்றுக்கு மாறுதலின்றி நடந்துகொள்ளவேண்டிய பொறுப்பும் அவர்களுக்கு இருந்தது. மற்போர் முடிந்த பின்னர் - போரில் வெற்றிபெற்ற எயின மல்லனுக்கு அவர்கள் தலைவன் பரிசளித்தான். அதன்பின் மற்போர் நடந்த இடத்திற்குச் சிறிது தொலைவில் அடர்த்தியான மரக் கூட்டங்களுக்கு மேலே, மற்றவற்றைவிடச் சற்று விசாலமாகவும், பெரிதாகவும்: அமைக்கப்பட்டிருந்த எயினர் தலைவனின் பரணிற்கு அவனோடு அழைக்கப்பட்டுச் சென்றார்கள் முடிநாகனும் சாரகுமாரனும். அரண்மனையைப் போன்று செழுமையாகவும், வளமாகவும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/132&oldid=490058" இலிருந்து மீள்விக்கப்பட்டது