பக்கம்:கபாடபுரம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

123


ஒடுவதுபோல் ஒற்றையடிப்பாதை ஒன்று ஊடறுத்துக்கொண்டு போயிற்று. அந்தப் பசுமை அடர்த்தியினிடையே சிள் வண்டுகள் ஒசையிடும் சூழலில் ஒற்றையடிப்பாதை என்ற சிறு வழி அச்சமூட்டுவதாக இருந்தது. குரவையிடும் ஒலி மெல்லக் கேட்டுக்கொண்டிருந்தது. ஆள் நடந்துவரும் ஒலியில் அமைதி கலைந்து மரங்களில் அடைந்திருந்த பறவைகள் சிறகடித்து எழுந்தன. பறந்துவிட்டு மறுபடியும் அடைந்தன.

அந்தி மயங்கும் நேரத்தின் இயல்பான இருளை மரங்களின் அடர்த்தி மிகைப்படுத்தி அதிகமாக்கி இருந்தது. தேக்கு, வெண்கடம்பு, தேவதாரு, ஆகிய மரங்கள் வானளாவ வளர்ந்திருந்தன. அவற்றின் பருத்த அடிமரங்கள் இருளில் பூதாகாரமாகத் தோன்றின. இரு குள்ள எயினர்கள் தீப்பந்தத்தோடு முன்னால் வழிகாட்டி நடக்கப் பின்னால் வேறிரண்டு எயினர்கள் காவல் வர இளையபாண்டியனும், முடிநாகனும் நடந்து சென்ற வழி நீண்டு கொண்டேயிருந்தது. நீண்ட நேரத்திற்குப் பின் தாங்கள் நடந்து சென்றுகொண்டிருந்த ஒற்றையடிப்பாதை ஒரு பள்ளத்தாக்கை நோக்கி இறங்குமுகமாகச் செல்வதை அவர்களால் உணர முடிந்தது. செழிப்பும், வளமும், பெருகி ஒரே பசுமை அடர்த்தியாகத் தாவரக்குகையாக இருண்டிருந்த அந்தப் பகுதியில் மேடு பள்ளம் உணர்வதே அருமையாக இருந்தது.

ஒரளவு பொறுமையைச் சோதிக்கும் தொலைவுவரை நடந்தபின் பள்ளத்தாக்கானதொரு சமவெளியில் மரங்கள் ஆகாயத்தை மறைக்காத திறந்தவெளிக்கு வந்திருந்தார்கள் அவர்கள். திறந்த வெளியில் அங்கங்கே பரவலாகத் தீப்பந்தங்கள் எரிந்துகொண்டிருந்தன. எயினர்கள் கூட்டம் கூட்டமாகத் தென்பட்டார்கள். மேல் மரம் வெட்டப்பட்டதால் பத்துப் பன்னிரண்டுபேர் அமர முடிந்த வட்டவடிவமான மேடைபோல் தானே நேர்ந்திருந்த ஒர் அடிமரத்தில் வலிய எயினன் கம்பீரமாக வீற்றிருந்தான். அவன் கையில் நீண்ட வேல் இருந்தது. அதன் இலைபோன்ற கூரியநுனி தீப்பந்தத்தின் ஒளியில் பளீரென்று மின்னிக்கொண்டிருந்தது. இருளில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/125&oldid=490051" இலிருந்து மீள்விக்கப்பட்டது