பக்கம்:கபாடபுரம்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

171


"சிறப்பான காரணம் எதற்காகவும் இதை வினவவில்லை சிகண்டியாசிரியரே! அறிவதற்காகவே வினாவுகிறேன்" என்று அவரை மேலும் தூண்டினார் பெரியவர். "இளைய பாண்டியர் முன்பே பலமுறை அந்த அபூர்வ இசையைக் கேட்டு என்னிடம் பெருமையாகக் கூறியதால்தான் நானும் சென்றேன். நான் படைத்துவரும் இசைநுணுக்க நூலுக்குப் பெரிதும் பயன்படும் அனுபவம் அது” என்று நிர்விகல்பமாக மறுமொழி கூறிவிட்டார் அவர். "அப்படியானால் நானும் அந்தப் பாண்மகளின் இசையைக் கேட்க ஆசைப்படுகிறேன். நாளை என்னை அழைத்துச் செல்வீரா?" - என்று உள்ளடக்கமான குரலில் சிகண்டியாரைக் கேட்டார் பெரியபாண்டியர்.

சிகண்டியார் தயங்கினார். "வேறொன்றுமில்லை நல்ல இசையை நானும் பாராட்டலாமே என்றுதான்" என மேலும் வேண்டினார் பெரியவர்.

இசைபோன்ற நுண்கலைகளில் விருப்பமே அதிகமில்லாத பெரியபாண்டியர் திடுமென்று இப்படிக் கேட்டதில் ஏதோ விபரீதமிருப்பதாக அப்போதுதான் சிகண்டியாருக்குப் புரிந்துகொள்ளமுடிந்தது. அவர் தட்டிக்கழிக்க முயன்றார். பெரியபாண்டியரோ பிடிவாதமாக அந்தப் பாண்மகளைத் தானும் பார்த்தே தீரவேண்டுமென்றார்.


28. கலைமானும் அரிமாவும்

பெரியபாண்டியருடைய பிடிவாதத்தைச் சிகண்டியா சிரியருடைய சொற்களால் தகர்க்கமுடியவில்லை. கலை காரணமாக எற்படும் ஆர்வத்தையும், அரசியல் காரணமாக ஏற்படும் அக்கறையையும், பகுத்து உணரமுடியாத அளவிற்குச் சிகண்டியாசிரியருடைய மதிமழுங்கியிருக்கவில்லை. நானும் அந்தப் பாண்மகளின் இன்னிசையைக் கேட்க ஆசைப்படுகிறேன் என்று பெரியபாண்டியர் கூறியதைச் சிகண்டியார் நம்பவில்லை. அவருடைய வேண்டுகோளில் இயற்கையான ஆர்வமோ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கபாடபுரம்.pdf/173&oldid=490103" இலிருந்து மீள்விக்கப்பட்டது